Home » சர்வதேச தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பிரதமர் மோடி!

சர்வதேச தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பிரதமர் மோடி!

by Rizwan Segu Mohideen
December 17, 2023 6:01 am 0 comment

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு இன்னுமே குறையவில்லை. இந்திய தேசத்தில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி விளங்குகின்றார்.

‘ேமார்னிங் கன்சல்ட்’ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி 76% ஒப்புதல் வீதத்துடன் சர்வதேச தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்து யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போவது யாரென்ற எதிர்பார்ப்பு உலகளவில் தற்போது நிலவி வருகின்றது.

ஆட்சியிலுள்ள பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், பா.ஜ.கவுக்கு எதிராக முக்கிய எதிர்கட்சிகள் நாடு முழுவதும் இணைந்து அமைத்த இந்தியா கூட்டணியும், இந்த இரு கூட்டணியிலும் இணையாத சில கட்சிகளுமாக இந்தத் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்றும் யூகங்கள் எழுந்தன. ஆனால் ஐந்து மாநில முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு உவப்பானதாக அமைந்திருக்கவில்லை.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.கவும், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோரம் மாநிலத்தில் பிராந்திய கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. காங்கிரஸ் வெற்றி பெற்ற தெலுங்கானா மாநிலத்திலும் பா.ஜ.க முந்திய தேர்தலில் பெற்ற இடங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகப் பெற்றுள்ளது.

‘இந்தியா கூட்டணி’ அமைப்பில் பல கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், அவை யாவும் அனைத்து மாநிலங்களிலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. இதனால் தற்போது வரை பா.ஜ.கவின் கரமே உயர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

இந்தச் சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ேமார்னிங் கன்சல்ட்’ என்ற ஆய்வு நிறுவனம் ‘சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு’ என்ற கருத்துக் கணிப்புப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 76% ஒப்புதல் வீதத்துடன் சர்வதேச தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 76% மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 18% மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், 6% பேர் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மனுவெல் 66% ஒப்புதல் வீதத்துடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் 58% ஒப்புதல் வீதத்துடன் 3 ஆவது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Morning Consult’ என்ற நிறுவனத்தின் கருத்துக் கணிப்பீடு அறிக்கையின்படி, உலக அளவில் பிரபலமானவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டுடன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் புகழ்பெற்ற தலைவராக முதலாவது இடத்தில் உள்ளார்? என்பது பற்றிய கேள்விக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன் பிறகு 2019 தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக பிரதமராகி தொடர்ந்து பதவியிலிருந்து வருகிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமராக தொடரும் முனைப்பில் நரேந்திர மோடி வியூகம் வகுத்து வருகிறார். பல மாநிலங்களில் பா.ஜ.கவை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே இந்தியா அளவிலும், உலகளவிலும் அடிக்கடி பல்வேறு நிறுவனங்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் குறித்து கருத்துக் கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இதில் பல கருத்துக் கணிப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் ேவாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘ேமார்னிங் கன்சல்ட்’, உலகத் தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் அமெரிக்கா உட்பட 22 நாடுகளின் மக்களிடம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இக்கருத்துக் கணிப்பிலேயே பிரதமர் நரேந்திர மோடிமுதலிடம் பிடித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 45 ஆண்டுகளாக அரசியலில் முக்கிய நபராக இருக்கிறார். இந்த பயணம்தான் அவரை பலமான தலைவராக மாற்றி உள்ளது. 15 ஆண்டு சங்கம் வாயிலாகவும், 15 ஆண்டுகள் கட்சிக்காவும் பணி செய்து குஜராத் முதல்வரானார். இந்த அனுபவத்தை வைத்து பார்த்தால் நாட்டில் சிலர் மட்டுமே இப்படி அரசியலில் இருப்பார்கள். இந்த நீண்ட அனுபவத்தின் மூலம்தான் பொதுமக்கள் என்ன கேட்க விரும்புகிறார்கள் என்பதை மோடி புரிந்து கொண்டு சிறந்து விளங்குகிறார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எஸ். சாராங்கன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT