வட்ஸ்அப்பில் புதிய கட்டுப்பாடு | தினகரன்

வட்ஸ்அப்பில் புதிய கட்டுப்பாடு

தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் வட்ஸ்ஆப் (WhatsApp) செயலியில் புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் பகிர (Forward) முடியும் என்பதே அதன் கட்டுப்பாடாகும்.

பேஸ்புக் தாய் நிறுவனத்தின் ஒரு நிறுவனமான வட்ஸ்அப், உலகளாவிய ரீதியில் 1.5 பில்லியன் பயனர்களைக் கொண்ட தகவல் பரிமாற்ற சேவை செயலியாகும்.

வட்ஸ்அப் மூலம் உலகளாவிய ரீதியில் வதந்திகள், மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள், பிறரின் அனுமதியற்ற வகையில் வீடியோக்கள், போலியான ஒலிப் பதிவுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்தோனேஷியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடஸ்அப் நிறுவனத்தின், கொள்கைகள் மற்றும் தொடர்பாடல்கள் தொடர்பான பிரதித் தலைவர், விக்டோரியா கிராண்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ள அந்த மாற்றம் கடந்த திங்கட்கிழமை (21) முதல் உலகளாவிய ரீதியில் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்று வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

இதுவரை ஒருவர் ஒரு தகவலை பகிரும்போது, ஒரே நேரத்தில் 20 பேரை அல்லது குழுக்களை தெரிவு செய்து அனுப்ப முடியும்.

இந்தியாவில் வட்ஸ்அப் மூலம் பரவிய வதந்திகளால் சிலர் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் இருந்தனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தக் கட்டுப்பாடு இந்தியாவில் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவலொன்றை 5 இற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரே தடவையில் அனுப்ப முடியாத போதிலும், அத்தகவலை மேலும் 5 பேருக்கு மீண்டும் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனாளர்களின் கருத்தைப் பொறுத்து அந்த சேவை மேம்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

 


Add new comment

Or log in with...