பசிலுக்கு எதிரான மோசடி வழக்கு மார்ச் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு | தினகரன்

பசிலுக்கு எதிரான மோசடி வழக்கு மார்ச் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கலண்டர் வழக்கு எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி ஒத்திவைக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று கூறியது.  

மேற்கூறிய வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  

சர்ச்சைக்குரிய கலண்டர் வழக்கில் எந்தவொரு விசாரணையும் இடம்பெறாதிருக்க  இடைக்கால தடைவுத்தரவு  விதிக்கப்பட்டிருந்தது. இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மேல் நீதிமன்றத்தின் நீதிபதி இறான் குலதுங்க முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் ஜனவரி 2015இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது தேர்தல் பிரசாரத்துக்காக 29.4மில்லியன் ரூபா செலவில் 50இலட்சம் பஞ்சாங்க கலண்டர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடன் அச்சிட்டதாக சட்ட மா அதிபர், மேற்கூறிய இருவரின் மீதும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  

2014நவம்பர் 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 31ஆம் திகதிக்கும் இடையில் மேற்படி கலண்டர்களை அச்சிட்டதன் மூலம் நாட்டு மக்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க தூண்டியிருந்ததாக சட்ட மா அதிபர் குற்றம்சாட்டியிருந்தார். 1981ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 15ஆம் இலக்க ஷரத்தின் 79ஆவது பிரிவின் படி மேற்கூறிய குற்றச்செயல் இலஞ்சக் குற்றமாக அமைகிறது என்றும் சந்தேக நபர்கள் அவ்வாறான குற்றத்தை இழைத்திருப்பதாகவும் சட்ட மா அதிபர் கூறியிருந்தார்.  

அதேநேரம் மேற்கூறிய இருவரும் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத்தின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு விடுக்கப்படுவதாகவும், இதற்கு முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஒரு சாட்சியாவார் என்றும் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.    


Add new comment

Or log in with...