Friday, March 29, 2024
Home » சவூதியில் அமைக்கப்படும் அதிநவீன நகரம் கித்தியா

சவூதியில் அமைக்கப்படும் அதிநவீன நகரம் கித்தியா

by gayan
December 16, 2023 7:15 am 0 comment

உலகின் அதிமுக்கிய சுற்றுலாத் தளமாக மாறிவரும் சவூதி அரேபியா, விஷன் 2030 திட்டத்தின் கீழ் பல மேம்பாடுகளை இராச்சியம் பூராகவும் மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா, பொருளாதாரம், மருத்துவம், வானவியல் உட்பட சகல துறைகளிலும் அந்நாட்டுத் தலைமையின் வழிகாட்டல்களின் கீழ் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை பதிவு செய்து ஒரு முன்னுதாரண நாடாக வலம் வருகிறது.

அந்த வரிசையில், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான்,அந்நாட்டுத் தலைநகரில் புதிதாக அமையப்பெறவுள்ள கித்தியா நகரத்திற்கான நகர்ப்புற வடிவமைப்பை வெளியிட்டதோடு, கித்தியாவின் உலகளாவிய வணிக அடையாளத்தையும் கடந்த வியாழனன்று அறிமுகப்படுத்தினார்.

ரியாத் புறநகரில் அமைந்துள்ள கித்தியா நகரானது, அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு, கலாசார அம்சங்கள் மற்றும் ஆடம்பர நவநாகரிக வாழ்க்கை வசதிகளை வழங்கும் தளமாக உருவாகி வருகிறது. இந்த நகர அமைப்பானது சவூதி மக்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சகலருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் இடமாக உருவாகி வருகிறது.

ரியாத் நகரிலிருந்து 40 நிமிட பயணத் தூரத்தில் அமைந்துள்ள கித்தியா நகரானது, துவாய்க் மலைப்பாறைகளால் சூழ்ந்த ஒரு அற்புதமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது. இ-விளையாட்டு தளங்கள், ஸ்பீட் பார்க் டிராக், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் கணிசமான நீர்சார் விளையாட்டுக்கள் உட்பட மேலும் பல புதுவிதமான அமசங்களைக் கொண்ட ஆடம்பர மையமாக கித்தியா நகரம் காணப்படுகிறது.

10 பில்லியன் சவூதி ரியால்கள் செலவில் அமையப்பெறும் அந்நகரானது, 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 60,000 கட்டடங்களைக் கொண்டுள்ளதோடு 600,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வரை குடியமர்த்தும் அளவுக்கு வசதிகள் கொண்டது. இந்த நிர்மானம் ஆண்டுதோறும் 48 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என அந்நாட்டு அதிகாரிகள் உறிதியளிக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இந்நகரில் உலகின் மிகப்பெரிய ஒலிம்பிக் அருங்காட்சியகத்தை நடத்தும் ஒரு மைதானமும் அமைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் பல்வேறு விளையாட்டு, கலாசார மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பொதித்த இவ்வாடம்பர நகர் கித்தியா, உலகின் முக்கியமான சுற்றுலா மற்றும் வணிக தளமாக உருப்பெறுகிறது.

கித்தியா தகரம் 325,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதோடு ஆண்டுக்கு 135 பில்லியன் சவூதி ரியால்கள் வரை GDP இனை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கருத்துத் தெரிவிக்கையில் “கித்தியா நகரத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் சவூதி விஷன் 2030 திட்டத்தின் அடிப்படை அங்கமாக உள்ளதோடு, இது இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதேவேளையில் சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மேலும் வளர உறுதுணையாகவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பங்களிப்பு செய்யும்” என்றார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக இந்நகரை மக்களுக்காக பாவனைக்கு விடுவதற்கான ஆயத்தங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

காலித் ரிஸ்வான்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT