கொலையாளியை தெரிந்து கொள்ள இலங்கையில் என்னை சந்திக்கவும் | தினகரன்


கொலையாளியை தெரிந்து கொள்ள இலங்கையில் என்னை சந்திக்கவும்

லசந்தவின் மகளுக்கு கோட்டா பதில்

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்ஷா விக்கிரமதுங்க எழுதியிருந்த கட்டுரைக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பதில் கூறியுள்ளார்.  

அவரது தந்தையின் கொலையில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கும் பங்கிருப்பதாக கூறப்படும் சந்தேகத்தை அஹிம்ஷா அவரது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். 

இக்கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் “லசந்தவின் மகளுக்கு அவரது தந்தையை கொலை செய்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால்அவரை இலங்கைக்கு வந்து என்னை சந்திக்கச் சொல்லுங்கள். என்ன நடந்தது என்பதை நான் அவருக்கு சொல்கிறேன்’ என்று கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள வாரப்பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.  

அஹிம்ஷா விக்கிரமதுங்கவின் ‘எனது தந்தைக்கு அவர்கள் செய்தது மற்றும் ஏன் அதை அவர்கள் செய்தார்கள் என்ற தலைப்பிலான கட்டுரை ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டது. அவரது தந்தை லசந்த விக்ரமதுங்க கொலைசெய்யப்பட்ட ஜனவரி 8ம் திகதியே இந்த கட்டுரை வெளியானது.

அன்னாரின் பத்தாவது வருட நினைவை முன்னிட்டே காலம்சென்ற லசந்தவின் மகள் இக்கட்டுரையை எழுதியிருந்தார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தனது தந்தை முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான வழக்கொன்றில் சாட்சியமளிக்கவிருந்த போது அவ்வாறு சாட்சியளிக்கும் முன் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று அவரது தந்தை தன்னிடம் கூறியிருந்தமை பற்றியும் தனது கட்டுரையில் அஹிம்ஷா எழுதியிருந்தார்.  

இந்நிலையில் மெல்போர்னில் இருந்து தினகரனுடன் பேசிய லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்ஷா அவர் (கோட்டாபய) உண்மையைத் தான் சொல்கிறார் என்பது எனக்கு நிச்சயமாக தெரிகிறது என்றும் தந்தையின் கொலையாளிகளை தெரியும் என்று அவர் கூறுவது உண்மைதான்’ என்றும் குறிப்பிடுகிறார். அத்துடன் இலங்கையில் நேருக்கு நேர் கோட்டாபயவை சந்திப்பதை அவர் நிராகரித்தார்.

நான் பொலிஸ் அல்ல. அவருக்கு தெரிந்ததை அவர் சி.ஐ.டி.யினருக்கு சொல்ல வேண்டும்.

இந்நிலையில் மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பான முன்னேற்றம் பற்றி கடந்த வாரம் கல்கிஸை நீதிமன்றத்தில் சாட்சியமளித்த சி.ஐ.டி.யை சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா,முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் மிக்-27 விமான கொள்வனவு தொடர்பான ஊழலைப் பற்றி தனது பத்திரிகையில் எழுதி வந்ததே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு பிரதான காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.


Add new comment

Or log in with...