புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதன் மூலமே சிறுபான்மையினரின் ஆதரவை பெறலாம் | தினகரன்

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதன் மூலமே சிறுபான்மையினரின் ஆதரவை பெறலாம்

அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் புதிய அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொலிபன்ட் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (20)  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேல் மாடிக்கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் திருமதி பரிமளாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்  உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பாடசாலை பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய உத்தேச அரசியல் அமைப்பு திட்டம் பாராளுமன்றத்திற்கு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த உத்தேச அரசியல் அமைப்பு திட்டமானது சிறுபான்மை மக்களுடைய நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தேச அரசியல் அமைப்புத்  திட்டத்தை இனவாத கண் கொண்டு பார்க்கின்ற ஒரு குழுவினர் எம்மத்தியில் இருக்கின்றார்கள். அவர்கள் என்றுமே இனவாதத்தை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டு இந்த உத்தேச அரசியல் அமைப்பு திட்டத்தை இல்லாது செய்வதற்கு தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஆனால் இதனை சிறுபான்மை கட்சிகள் என்ற வகையில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நல்லாட்சி அரசாங்கம்  அமைக்கப்பட்ட பொழுது தன்னுடைய தேர்தல் வாக்குறுதியிலே புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக  கூறியே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்தது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக இன்று பல்வேறு சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

அந்த சக்திகளின் செயல்பாடுகளை கண்டு அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு திட்டத்தை கொண்டு வருவதில் பின்வாங்குமாக இருந்தால் அது சிறுபான்மை மக்களின் ஆதரவை இந்த அரசு இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதியின் வழிகாட்டலோடு புதிய அரசியல் அமைப்பு திட்டத்தை முறையாகப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதனை நிறைவேற்றி அதன் மூலமாக சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  

(ஹட்டன் விசேட நிருபர்)     


Add new comment

Or log in with...