தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்க்கவே ஆளுநர் பதவியை ஏற்றேன் | தினகரன்

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்க்கவே ஆளுநர் பதவியை ஏற்றேன்

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்  

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அவர்களது தாய்மொழியில் செவிமடுத்து அவற்றிற்கு தீர்வுகாணவே கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை பெற்றுக்கொண்டதாக ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  

இந்த ஆளுநர் பதவி கிழக்கில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கானதாகும். இன, மத, பிரதேச வேறுபாறின்றி கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற சகல மக்களுக்கும் சேவைகள் செய்ய ஆயத்தமாகவுள்ளேன்.  

சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் முயற்சியினால் சுமார் 25 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டட திறப்பு விழா நேற்று முன்தினம் (20) நிந்தவூர் வெளவாலோடை பிரதேசத்தில் நடைபெற்றது. ஆளுநர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,   கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு முஸ்லிமாக இருந்தால் தமிழர்களும், ஒரு தமிழராக இருந்தால் முஸ்லிம்களும் எதிர்த்திருப்பார்கள். இது இந்த நாட்டில் சர்வ சாதாரணமான விடயமாகும்.  

தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இன ஒற்றுமை என்பது சாத்தியமானதல்ல.

இப்பிரதேசத்தில் இன மோதலை உருவாக்கி அதனூடாக அரசியல் இலாபம் பெறுவதற்கு சில குழுக்கள் இயங்குகின்றன.  

கிழக்கு ஆளுநர் பதவியினை நான் ஜனாதிபதியிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டேன். இப்பதவியினை பெறுவதற்கு முன்னர் இதன் நன்மை, தீமைகள் பற்றி அறிந்து கொண்டதன் பின்னர்தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு பதவியினை பொறுப்பெடுத்தேன்.  

கிழக்கு மாகாணத்தில் 80 வீதம் தமிழ் மொழி பேசுபவர்களே வாழ்கின்றனர். ஆனால் இதுவரை காலமும் சகோதர மொழி பேசுபவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் எமது தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அவர்களது மொழியில் சரியாக விளங்கிக் கொள்ளவோ, அதனை தீர்த்து வைக்கவோ முடியவில்லை. இதற்கு மொழி ஒரு தடையாக இருந்தது. இன்று அவ்வாறு இல்லை, கிழக்கிற்கு தமிழ் மொழி பேசும் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சில தமிழ் சகோதரர்கள் எதிர்ப்பது போல், கிழக்கு மாகாண ஆளுநராக ஒரு தமிழ் சகோதரர் நியமிக்கப்பட்டிருந்தால் அதனை சில முஸ்லிம் சகோதரர்கள் எதிர்த்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் வைத்தியர் எம்.ஏ.நபீல், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுத்தீன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ​டொக்டர் ஸஹிலா இஸ்ஸதீன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  

(அம்பாறை மாவட்ட குறூப்,  நிந்தவூர் குறூப், சாய்ந்தமருது தினகரன் நிருபர்கள்) 


Add new comment

Or log in with...