பட்டதாரிகளின் வயது கட்டுப்பாட்டை நீடித்து நியமனம் வழங்க வேண்டும் | தினகரன்

பட்டதாரிகளின் வயது கட்டுப்பாட்டை நீடித்து நியமனம் வழங்க வேண்டும்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இந்த அரசாங்கம் உள்வாரி,வெளிவாரி என்ற பேதங்களைக் காட்டாமல் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கக்கூடிய  செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும், அத்துடன் பட்டதாரிகளுக்கு விதிக்கப்படும் வயது எல்லைக் கட்டுப்பாட்டினையும் நீடித்து அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக் எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட   பாராளுமன்ற உறுப்பினர்         ஸ்ரீநேசன் தெரிவித்தார். 

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று 21 நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

''எமது கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள்  இருந்துகொண்டே இருக்கின்றன, அந்தவகையில் தற்போது முக்கியமானதொரு பிரச்சினையாக காணப்படுவது பட்டதாரிகளின் நியமனம் தொடர்பான பிரச்சினையாகும். கடந்தகாலத்தில் பட்டதாரிகள் தங்களுக்கு தொழில்வாய்ப்பு தரவேண்டும் என்ற அடிப்படையில்  பல்வேறு விதமான கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக தொடர்ச்சியாக பல மாதங்கள் இப் போராட்டத்தை நடாத்தினர். 

அந்த அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்த பேராசிரியர் ஏ.மாரசிங்க போன்றோர் நேரடியாக வந்து பட்டதாரிகளை சந்தித்து சில வாக்குறுதிகளையும் வழங்கிச் சென்றனர். 

அதனையடுத்து பட்டதாரிகளை பயிலுனர்களாக நியமித்து அவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சிகளை அளித்ததன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குவதாக கூறப்பட்டது, தொடந்து பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் ஏனைய சில மாவட்ட செயலகங்களிலும் நடாத்தப்பட்டன.  

அந்தவகையில் உள்வாரி,  வெளிவாரி என்ற பேதங்களில்லாமல் தமக்கு நியமனங்கள் கிடைக்கும் என்று இப் பட்டதாரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறிருக்கையில் உள்வாரிப் பட்டதாரிகளுக்கு மாத்திரம் நியமனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன அடுத்த கட்டத்தில்  வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் கொடுப்பதாகவும் உறுதி கூறப்பட்டிருந்தது. 

ஆனால் அந்த  வெளிவாரிப் பட்டதாரிகள் பற்றிய சிந்தனைகள் இன்னும் கவனத்தில் கொண்டுவரப்படவில்லை என்பது மிக வேதனைக்குரியது. 35 வயதுக்குட்பட்டவர்களுக்குத்தான், வேலை என சொல்லுகின்றபோது 2012 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஏழு வருடங்கள் பட்டங்களைப் பெற்றும் தொழில் இல்லாமல்   இருக்கின்றார்கள். 

எனவே  அரசாங்கம் உள்வாரி , வெளிவாரி என்ற பேதங்களைக் காட்டாமல் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை கொடுக்கக்கூடிய தங்களுடைய செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும்.

இவர்களது வயதுக் கட்டுப்பாடுகள் 35 ஆக வகுக்கின்றபோது பலருக்கு தொழில் கிடைக்காத சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் வயதுக்கட்டுப்பாட்டை 45ஆக மாற்றும்போது அது ஒரு சிறந்த செயற்பாடாக அமையும்'' என தெரிவித்தார்.   


Add new comment

Or log in with...