மெக்சிகோ எரிபொருள் குழாய்வெடிப்பு: பலி 71 ஆக உயர்வு | தினகரன்

மெக்சிகோ எரிபொருள் குழாய்வெடிப்பு: பலி 71 ஆக உயர்வு

மெக்சிகோவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எரிபொருள் குழாய் வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.  

டிலஹுலிபான் நகரில் எரிபொருள் திருடர்களால் இந்தக் குழாய் உடைக்கப்பட்டதை அடுத்தே அது வெடித்திருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கசியும் எண்ணெயை பெறுவதற்கு பெருமளவு மக்கள் அந்தப் பகுதியில் சூழ்ந்திருந்தபோதே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.  

பாதுகாப்பு படையினரால் அந்தப் பகுதி முடப்பட்டதை அடுத்து தீயில் கருகிய பல டஜன் உடல்கள் அங்கு விடப்பட்டிருந்தன.  

திருடர்களால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பற்றாக்குறையை தடுப்பதற்கு ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவேல் லோபஸ் புதிய கொள்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  

“தமது கார்களுக்கு எண்ணெய் பெற முடியுமா என்று பார்ப்பதற்கே எல்லோரும் அங்கு திரண்டனர்” என்று சம்பவத்தை பார்த்த விவசாயியான இசையஸ் கார்சியா குறிப்பட்டுள்ளார். “இங்கு எந்த எண்ணெய் நிரப்பு நிலையமும் இல்லை” என்றும் அவர் கூறினார்.  

உயிரிழந்த 71 பேரில் 12 சிறுவர்கள் மற்றும் மூன்று பெண்களுடன் உள்ளனர். 

வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர்ந்து ஒன்றுதிரண்ட வண்ணம் உள்ளனர். வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் தடயவியல் நிபுணர்கள் எரிந்த பகுதிகளை படம்பிடித்து வருகின்றனர். இந்த வெடிப்புக்கு பின்னர் எண்ணெய் வெளியே பீச்சயடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் குழாயில் துளையிட்டிருப்பதே இதற்கு காரணம் என மெக்சிகோ அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.   மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது.     


Add new comment

Or log in with...