தங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது | தினகரன்

தங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது

தங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது-Tangalle Kudawella Shooting Suspect Arrested With Pistol

தன்னியக்க கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு
மற்றைய நபரை கைது செய்ய தொடர்ந்தும் விசாரணை

தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அங்கிருந்த நால்வர் உயிரிழந்ததோடு, மேலும் 8 பேர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய 10 பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை தங்காலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் இன்று (19) முற்பகல் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பெலியத்த, நாகுலுகம, கலகம கிழக்கு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான, ஜயலத் ரணசிங்க திசாநாயக்க ரோஹித குமுது குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு வந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 9 மில்லி மீற்றர் வகை, தன்னியக்க கைத்துப்பாக்கி (Pistol) ஒன்றும், 8 தோட்டாக்களும் அதற் மகேஷின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்காக வந்த மற்றைய சந்தேகநபரையும், அதேபோன்று இச்சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வது தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளைய தினம் (20) தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார் 


Add new comment

Or log in with...