காதலர் தினம் இனிமேல் இல்லை! | தினகரன்

காதலர் தினம் இனிமேல் இல்லை!

- மாணவிகளெல்லாம் எமது சகோதரிகள்

பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றி அறிவித்துள்ளது. காதலில் விழுந்தவர்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினம்தான். ஆனால், உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் அதிகாரபூர்வமாக தங்களது காதலை கொண்டாடும் ஒரே நாள் 'வலன்ரைன்ஸ்' தினம் என்ற காதலர் தினம் ஆகும்.

ஆண்டுதோறும் பெப்ரவரி 14ம் திகதி வந்துவிட்டாலே காதலர்கள் குதூகலமாகி விடுவர். தங்கள் காதல் ஜோடிக்கு என்ன பரிசு தந்து அசத்தலாம் என்பதை ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே யோசிக்கத் தொடங்கி விடுவர். தெற்காசிய நாடுகளில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒரு சில கலாசார பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அன்றைய தினத்தில் காதலர்களை தாக்கி கட்டாய திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்தியாவில் இது போன்ற பலவந்தமான சம்வவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானிலும் காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு அதிக எதிர்ப்பு உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் அந்நாட்டில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் மத்திய பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது அன்றைய தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட அந்தப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பெப்ரவரி 14ம் திகதி சகோதரிகள் தினத்தையொட்டி, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு 'துப்பட்டா' மற்றும் முகத்தை மூடிக் கொள்ளும் துணிகளை பரிசாக வழங்க அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக நன்கொடை கேட்டும் அப்பலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜாபர் இக்பால் கூறுகையில், "காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாசாரத்தின் அடிப்படையில் உருவானது. காதலர் தினம் குறித்து இஸ்லாமிய மதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

நமது கலாசாரத்தின்படி பெண்களை தாய், சகோதரி, மனைவி என்றே போற்றி வந்துள்ளோம். ஆனால் இன்றைய இளைஞர்கள் நமது கலாசாரத்தை மறந்து மேற்கத்திய மோகத்துக்கு அடிமையாகி வருகின்றனர்

எனவேதான் காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக அறிவித்து, அன்றைய தினம் இங்கு படிக்கும் மாணவிகளுக்கு துப்பட்டா மற்றும் முகத்தை மூடும் துணியை வழங்க முடிவு செய்துள்ளோம். இதனை பல்கலைக்கழக ஊழியர்கள்வழங்குவார்கள்"என கூறியுள்ளார்.

வேளாண் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றுவதன் மூலம், இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் ரக்‌ஷாபந்தன் பண்டிகையை போல் மாறிவிடும் என அவர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.

(இணையம்)


Add new comment

Or log in with...