ஜா-எல, துடெல்ல ரயில் கடவையில் விபத்து; தாயும், 8 வயது மகளும் பலி | தினகரன்

ஜா-எல, துடெல்ல ரயில் கடவையில் விபத்து; தாயும், 8 வயது மகளும் பலி

ஜா-எல, துடெல்ல ரயில் கடவையில் விபத்து; தாயும், 8 வயது மகளும் பலி-Ja-Ela Thudella Railway Crossing Accident-Mother and Child Killed

ஜா-எல, துடல்ல புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் அவரது 8 வயது மகள் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) பிற்பகல் 2.45 மணி அளவில் ஜா-எல, துடல்ல புகையிரத கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் தாய், அவர்களது மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணும் சிறுமியும் மரணமடைந்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த புகையிரத கடவை கதவுகள் பழுதடைந்துள்ளதோடு, அது தொடர்பான எச்சரிக்கை பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை கவனிக்காது சென்ற இவர்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். புகையிரத கடவை கதவுகளை திருத்தும் பணிகள் நாளை (20) இடம்பெறவிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்தவர்கள் ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான சுமாலி சீலவதி மற்றும் எட்டு வயதான சஞ்சலா சமூதயா எனும் அவரது மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சடலங்கள் தற்பொழுது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த நபர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Add new comment

Or log in with...