Friday, March 29, 2024
Home » ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை மேற்பார்வை செய்த ஜனாதிபதி

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை மேற்பார்வை செய்த ஜனாதிபதி

- உயர் மட்ட சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து ஹோட்டன் அண்மித்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியம்

by Rizwan Segu Mohideen
December 16, 2023 9:36 am 0 comment

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா உட்பட அதனை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலா வலயமாக (High-end Tourism) அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி நேற்று (15) ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவிற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே இதனை வலியுறுத்தினார்.

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் பூங்காவிற்கு வருகைத் தந்த ஜனாதிபதி அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் குறிப்பொன்றைப் பதிவிட்ட பின்னர் ஒஹிய வீதியினூடாக பூங்காவில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை அண்மித்து காணப்படும் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இடங்களை வரைபடத்தின் மூலம் மேற்பார்வை செய்த ஜனாதிபதிபதி, ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைவொன்றை தயாரித்து விரைவில் தன்னிடம் கையளிக்குமாறும் அறிவுறுத்தினார்.

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளின் அதிக கவனத்தை ஈர்த்துள்ள ஹோட்டன் சமவெளியை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலா பிரயாணிகளை இலக்கு வைத்து அபிவிருத்தி செய்யும் பட்சத்தில் அதிகளவான வெளிநாட்டு வருவாயினை ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அந்தச் செயற்பாடுகள் அனைத்தும் சுற்றாடலுக்கு உகந்ததாகவும் நிலைபேறானதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். வனப்பகுதியை அண்மித்து வாழும் மக்களின் வாழ்வாதார முறைமைகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதோடு, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதால் மக்கள் வாழ்வாதாரத்தை பலப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அதனையடுத்து உடவேரிய தோட்டத்தின் ஊடாக சரிவடைந்துள்ள வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளையும் ஜனாதிபதி மேற்பார்வை செய்தார்.
ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் தலைமை பொறுப்பாளர் ஆர்.எம்.என்.கே.ரத்நாயக்க மத்திய மாகாண வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் ஜீ விக்ரமதிலக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT