படைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம் | தினகரன்

படைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்

இலங்கையின் விவசாயத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தவென உயிரியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.

படைப்புழுவை கட்டுப்படுத்தக்கூடிய வைரஸ்கள் வேறு நாடுகளில்காணப்படுகின்றன. அதனால் உள்நாட்டில் வேகமாகப் பரவிவரும் படைப்புழு அச்சறுத்தலைத் தடுக்க அனைத்து பூச்சிக்கொல்லி தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தவும் விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விவசாய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எம். டபிள்யூ. வீரகோன் தெரிவித்திருக்கின்றார்.

படைப்புழுவின் அச்சுறுத்தலைக் கட்டு ப்படுத்தவென கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இவ்வருடம் ஜனவரி 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் விவசாய திணைக்களம் வாராந்த பிரசார நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இப்பிரசார நிகழ்ச்சிகளில் விவசாய திணைக்கள அதிகாரிகள் மட்டுமின்றி கமத்தொழில் சேவைகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து பங்கெடுக்கின்றனர்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு உட்பட ஏனைய சர்வதேச நிறுவனங்களிதும், பல்கலைக்கழகங்களில் இருந்தும் இப் படைப்புழு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.

கம்பளிப் பூச்சி ரகத்தை சேர்ந்த இப் படைப்புழு முதலில் அம்பாறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் தற்போது இப்புழு நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவியுள்ளன.

முதலில் நெல் வயல்களை பாதித்த இப்படைப்புழுக்கள் இப்போது ஏனைய பயிர் வகைகளையும் அழித்து வருகின்றன. இப்படைப்புழு தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கையோடு செயற்படுமாறு விவசாய திணைக்களம் பயிர்ச் செய்கையாளர்களைக் கேட்டுள்ளது.

இப்படைப்புழு தாக்கம் காரணமாக 80 ஆயிரம் ஹெக்டயர் சோளப் பயிர்ச் செய்கையில் 50 சதவீதம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சோளப்பயிர் தற்போது முதிர்வடைந்து வருவதால் அடுத்து இப்புழு நெற் செய்கையைப் பாதிக்கலாம் என்ற அச்சம் விவசாயத் துறையினர் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது.

இப்புழு தொற்றிக் கொள்ளும் பயிர்களில் 80 சதவீதத்தை தின்று அழித்துவிடும். அத்துடன் பெண் புழு தனது வாழ்நாளில் ஆயிரம் முட்டைகளுக்கு மேல் இடும். அதன் காரணத்தினால் அவை விரைவாகப் பரவுகின்றன. இது கூட்டுப்புழு நிலையில் தான் பயிர்களைத் தாக்குகின்றது.

முற்றிலும் வளர்ச்சியடைந்த இந்த படைப்புழு காற்று வீசும் திசையில் ஒரு நாளில் 100 கிலோ மீற்றர்கள் தூரம் வரை பறக்கக் கூடியவை. அவை பரவுவதை எம்மால் தடுக்க முடியாதுள்ளது. எனினும் அவை பரவுவதை தாமதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கின்றோம் எனப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டிருக்கின்றார்.

மேலும் இந்த படைப்புழு இந்தியாவில் இருந்துதான் இங்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இப்புழு இந்தியாவில் காணப்படுவதாக இலங்கையின் விவசாய அதிகாரிகள் தகவல்களைப் பெற்றுள்ளனர். அது தொடக்கம் சகல கள அதிகாரிகளுக்கும் குறிப்பிடத்தக்களவு விவசாயிகளுக்கும் படைப்புழு குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை விவசாய திணைக்களம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

எனினும் கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன் அம்பாறையிலும் அனுராதபுரத்திலும் படைப்புழு காணப்படுவது தொடர்பான தகவல்களை விவசாயத் திணைக்களம் பெற்றது. அன்று முதல் படைப்புழு தாக்கம் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் இரசாயன செயற்பாடுகளையும் விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தி உள்ளது. எனினும் இந்தப் புதிய பூச்சி இனத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய இரசாயன வகைகளை உடனடியாக இந்நாட்டு விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்த முடியாத நிலைமை இருந்தது.

என்றாலும் மூன்று வகையான இரசாயனப் பதார்த்தங்கள் இப்புழுக்களைக் கட்டுப்படுத்தவென தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இப்படைப்புழுவைக் கட்டுப்படுத்தக்கூடிய ஐந்து இரசாயன வகைகளை இப்போது விவசாயத் திணைக்களம் சிபாரிசு செய்துள்ளது.

ஆனாலும் இரசாயன பூச்சிக்கொல்லிகளால் மாத்திரம் இப்படைப்புழுவை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. ஏனைய நாடுகளிலும் இதே பிரச்சினை நிலவியது. அதன் காரணத்தினால் இப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் விவசாய திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது.

இந்தப் படைப்புழு கடும் சாம்பல் நிறத்திலான முன் இறக்கைகளுடன் இளம் மற்றும் கடும் நிறத்துடனான ஒழுங்கற்ற புள்ளிகளை கொண்டுள்ளது. அத்துடன் இரு இறக்கைகளின் முடிவிலும் ஒரு வெள்ளைப்புள்ளி தென்படும். இதன் முட்டைப்புழு பச்சை நிறத்தில் காணப்படும். முழுமையாக வளர்ந்த முட்டைப்புழு 1 முதல் 1 1/2 அங்குல நீளமுடையவை. முதிர்ச்சியடைந்த முட்டைப்புழுவின் முகத்தில் வெள்ளை நிறப்புள்ளிகளும் காணப்படும்.

ஆகவே விவசாயிகள் இப்படைப்புழு குறித்து அதிக அவதானத்துடன் நடந்து கொள்வதோடு அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விவசாயத் திணைக்களத்தின் சிபாரிசுகளின் அடிப்படையிலும் முன்னெடுக்கவும் தவறக்கூடாது.


Add new comment

Or log in with...