Saturday, April 20, 2024
Home » நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையே நாசமாக்குகிறார்கள்
20,000 சம்பள உயர்வு கோரி போராடுபவர்கள்

நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையே நாசமாக்குகிறார்கள்

by sachintha
December 15, 2023 9:30 am 0 comment

சபையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பத்தாயிரம், இருபதாயிரம் ரூபா என சம்பள அதிகரிப்பை கோரி வேலைநிறுத்தம் செய்பவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையே நாசமாக்குகிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

பத்தாயிரம் ரூபாவுக்காக கருவில் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை அவர்கள் கருக்கலைப்பு செய்கின்றனர் என சபையில் குறிப்பிட்ட அவர், நாட்டின் சில தந்தையர்களும் தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தங்கள் நிகழ்காலத்திற்காக அழிப்பதற்காகவே வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்றும் ஜனாதிபதி கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி ஒத்துழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் வரவு செலவு திட்டம் தொடர்பில் விசேட உரையொன்றை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இது ஒரு நீண்ட பயணம். ஓரிரண்டு நாட்களில் முடிக்கும் பயணம் அல்ல. 2048 வரை செல்ல வேண்டிய பயணம். ஆனால் நமக்கு இந்த வழியைத் தவிர வேறு வழியில்லை. நாம் வேறு வழியில் சென்றால், நமக்கு எதிர்காலம் இல்லை. உண்மையைச் சொல்வதானால், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாம் செயல்படுத்தும் கொள்கைகள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் செய்திருக்க வேண்டியவை. ஆனால் சில அரசியல் குழுக்கள் தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டு இவற்றைப் புறக்கணித்தன.

அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகள் தோற்றுவிக்கும் மாயைகள் தொடர்பில் முழு நாடும் கவனமாக செயற்பட வேண்டும். அவ்வாறான மாயைகளாக கூறப்படும் விடயங்களினால் நாம் மீண்டும் படுகுழியில் விழுவது மட்டுமன்றி வங்குரோத்து நிலைக்கும் செல்வோம்.

முழுமையான பொருளாதார சுதந்திரத்திற்காக நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் நாம் இதுவரையில் பயணித்த சரியான பாதையை மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

சிலர் கதைகளை கூறி விமர்சனங்களை மாத்திரமே முன்வைக்கும் வேளையில் நான் செயற்பாட்டு ரீதியான பலன்களை காண்பித்துள்ளேன். உலகத்தினதும், இலங்கையிலும் பெரும்பான்மையான ஆதரவை பெற்று வெற்றிப் பாதைக்குள் கொண்டுச் சென்றுள்ளேன்.எமக்கு நீண்ட தூரம் பயணம் உள்ளது என்பது உண்மை . ஆனால் கயிற்றுப் பாலத்தை கடந்த பின்னர் சிறந்த பாதை உருவாகும். சரியான வழியில் செல்லத் தவறினால் திக்கற்று நிற்போம். இந்த பயணத்தில் இரு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இதே வழியில் பயணிப்பது முதலாவது முறை. கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாதிருத்தல் அடுத்த படிமுறை. அதற்கு தயார் எனில் எதிர்காலம் சிறக்கும். அதற்கு எவரும் தயாரில்லை எனில் நாட்டின் எதிர்காலம் ஆபத்தானதாக அமையும். வற் வரி உள்ளிட்ட வரிகளால் சமூகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளமை தெரிகிறது. விருப்பத்துடன் நாம் வரி விதிக்கவில்லை. மாற்று வழிகள் எவையும் இல்லாமையே வரி விதிப்புக்கு காரணம். அது கடினமாக தீர்மானம். நாட்டின் எதிர்காலத்திற்காக அதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பொருளாதாரம் வலுவடையும் போது மக்களுக்கு தேவையான சலுகைகளை வழங்கவும் எம்மால் முடியும். வரிச் சட்டத்தில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக பல வருடகாலமாக வரிச் செலுத்தாமல் இருப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்ற வேண்டும். வரி செலுத்துவோரை நாம் பாதுகாப்போம். வரி செலுத்தாதவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்துவோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT