Saturday, April 20, 2024
Home » சுவர்க்கம் செல்ல சுலபமான வழி

சுவர்க்கம் செல்ல சுலபமான வழி

by sachintha
December 15, 2023 11:46 am 0 comment

உலக வாழ்வை மறுமையின் விளைநிலமாக பயன்படுத்தி கொள்வது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இதன் நிமித்தம் நல்லவைகளை விதைத்து, நன்மைகளை அறுவடை செய்து, மறுமையில் சுவர்க்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.இது தான் மனித வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரியவன் என்று உறுதியாக நம்ப வேண்டும். அவன் வகுத்து தந்த தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்ற கடமைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். மேலும் பிற மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பலன் தரும் வகையில் தனது சொல்லையும், செயலையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு மனிதன் பிறருக்கு செய்த தீங்கை, பாதிப்புக்குள்ளானவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை’ என்று அல் குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில், சக மனிதர்கள் செய்த தீமையை மன்னித்து விட்டால் அதற்கு பிரதியாக இரட்டிப்பாக கூலியைத் தருகிறேன் என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்.

அந்த வகையில் பிறரின் குறைகளை மறைப்பதும், பிறரின் தீமைகளை மன்னிப்பதும் சுவர்க்கம் செல்ல சுலபமான வழி என்பதை இதன்மூலம் எம்மால் அறிந்து கொள்ளலாம்.

அதேபோன்று, பிறரை உயர்வாக கருதும் எண்ணம் சுவர்க்கத்தை பெற்றுத் தரும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, நான் இப்போது உங்களுக்கு இறைவனால் சுவர்க்கவாதி என்று அறிவிக்கப்பட்டவரை அடையாளம் காட்டவா? என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள் ஆவலுடன் ஆம் என்றனர். அப்போது நபிகளார், இப்போது ஒருவர் நம்மை கடந்து செல்வார், அவர்தான் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார் என்று கூறினார்கள். அப்போது ஒருவர் இடது கையில் தன் காலணிகளை பிடித்தவராக ‘வுழு’ செய்த தண்ணீர் தாடியிலிருந்து வழிந்தோடிய வண்ணம் அக்கூட்டத்தை கடந்து சென்றார். நபித்தோழர்களில் ஒருவருக்கு, எந்த நல்ல செயலின் காரணமாக இத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை அவர் பெற்றார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அவரிடம் சென்று, ‘உங்களுடன் இரண்டொரு நாட்கள் தங்க வேண்டும். அதற்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னர் அவருடன் தங்கி அவரது அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். அப்போது அவரிடம் எந்த விதமான சிறப்பான நற்செயல்களையும் அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. எனவே அவரிடமே கேட்டார், ‘நாங்கள் செய்வது போன்றுதான் தொழுகை மற்றும் அன்றாட கடமைகளைத்தான் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் சுவர்க்கவாதி’ என்பதாகக் கூறினார்கள். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவதற்கு நீங்கள் என்ன நற்செயல்களைச் செய்கிறீர்கள்? என்று அறிந்துகொள்ளவே உங்களுடன் தங்கினேன்’ என்றார்.

அதற்கு அவர், ‘நான் எல்லோரையும் போலத்தான் எனது கடமைகளைச் செய்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. எந்த சகோதர மனிதனையும் என் மனதளவில்கூட தாழ்வாக என்றுமே எண்ணுவதில்லை. ஒருவேளை அதுதான் எனக்கு சிறப்பை பெற்றுதந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்’ என்று பதில் கூறினார்.

(ஆதாரம்-: நபிமொழி)

மேலும் பக்கத்து வீட்டுகாரர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிப்பதும் சுவர்க்கம் செல்ல சுலபமான வழியாகும். ஒரு முறை, நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெண்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லி, நாளை மறுமையில் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்? என்று தோழர்கள் வினவினார்கள். அதற்கேற்ப அவர்கள், ‘ஒரு பெண்மணி இஸ்லாமிய கடமைகள் அத்தனையும் மிக சிறப்பாக நிறைவேற்றுகிறார். உபரியான தொழுகை, கூடுதலான நோன்புகளை நோற்கிறார். இறைவனுக்குச் செய்ய வேண்டிய எந்த கடமைகளிலும் சிறு குறை கூட செய்வதில்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சுமுகமான உறவோடு வாழ்வதில்லை.

மற்ற பெண்மணியோ இறைகடமைகளை குறிப்பிட்ட அளவிலேயே செய்கிறார். அதிகப்படியான எந்த அமல்களையும் செய்யவில்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பாசத்தோடு வாழ்கிறார். இந்த இருவரில் எவர் ஈடேற்றம் பெற்றவராய் இருப்பார்? என வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு, முதல் பெண்மணி இறைகட்டளை ஆயிரம்தான் செய்திருந்தாலும், பிற மனிதர்களுடன் இணக்கமாக வாழாத காரணத்தினால், அவள் நரக நெருப்பிற்கு விறகாக மாறிவிடுவாள். இரண்டாவது பெண் இறைகட்டளைகளை அளவோடு செய்த போதிலும், அண்டை வீட்டாரை அன்போடு அரவணைத்ததால், அவள் சொர்க்கத்தின் வாரிசாக மாறிப்போவாள்’ என்று கூறினார்கள்.

(ஆதாரம்-: நபிமொழி)

இதேவேளை பெண்மணியொருவர் வெளியூர் சென்றபோது தான் வளர்த்த பூனையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, அதற்குரிய உணவை வழங்காமல் சென்று விட்டாள். இதை அறிந்த போது, அப்பெண் நம்மோடு அண்டி வாழும் அந்த வாயில்லா பிராணியை வஞ்சித்த காரணத்தினால் பெரும் பாவத்திற்கு ஆளாகி விட்டாள் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: -நபிமொழி)

தவறான முறையில் வாழ்ந்த ஒரு பெண், கிணற்றை கடந்து சென்றபோது அங்கு ஒரு நாய் மிகுந்த தாகத்தோடு நின்றிருந்ததை கண்டாள். அதன்மீது இரக்கம் கொண்டு தன் காலணியை தன் முந்தானையில் கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அந்த நாயின் தாகம் தீர உதவி செய்தாள். அவளின் அந்த நல்ல செயலை ஏற்றுக்கொண்ட இறைவன் அவளை சுவர்க்கவாதி என்று அறிவித்தான்.

பிற உயிரினத்தின் மீது அன்பு, பாசம் காட்டுவதும் சுவர்க்கம் செல்ல சுலபமான வழி என்பதை இதன் மூலம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்தின் போது சுவர்க்கத்தில் நுழைந்து செல்லும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்கள் செல்லும் வழியில் ஒருவர் நடந்து செல்லும் காலோசை சப்தத்தை கேட்டார்கள். இதுபற்றி வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டபோது, ‘இது உங்களின் நண்பர் பிலால் (ரழி) அவர்களின் காலோசை’ என்று குறிப்பிட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

விண்ணுலகப் பயணம் முடிந்து வந்த நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரழி) அவர்களிடம் ‘நான் சுவர்க்கம் சென்ற போது என்னை முந்தி நீ சென்ற காலோசை சப்தத்தை கேட்டேன். அந்த பாக்கியம் பெற நீ என்ன நற்செயல் செய்கிறாய்?’ என்று வினவினார்கள். நான் எந்தவிதமான சிறப்பு செயலையும் செய்வதில்லை. ஆனால் நாள் முழுக்க ‘வுழு’வோடு (அங்க சுத்தம்) இருப்பதை கடமையாக்கிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் தொழுவதற்கு தயாராகவே இருப்பேன். ஒருவேளை அது காரணமாக இருக்கலாம்’ என்றார்கள்.

தொழுகைக்கு எப்போதும் தயாராக இருப்பதும் கூட சுவர்க்கம் செல்லும் சுலபமான வழியைச் சொல்லும்’ என்பது இதன்மூலம் தெரிகிறது.

ஆகவே சுவர்க்கம் செல்ல மனித சக்திக்கு அப்பாற்பட்டு மிக கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. மிக சிறந்த மனிதாபிமான செயல்களின் மூலம் மிக உன்னதமான செயல்கள் முலம் சுவர்க்கத்தை எம்மால் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள்பாலிக்கட்டும்.

அபூ மதீஹா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT