Saturday, April 20, 2024
Home » 107 கிலோ போதைப்பொருள் புத்தளத்தில் நேற்று அழிப்பு
2019 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட

107 கிலோ போதைப்பொருள் புத்தளத்தில் நேற்று அழிப்பு

by sachintha
December 15, 2023 6:46 am 0 comment

புத்தளம் மேலதிக மாஜிஸ்திரேட் மிஹில் ஷிரந்த சத்துருசிங்க முன்னிலையில் சீமெந்து ஆலை உலைக்குள் எரிப்பு

 

நாட்டில், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் கைப்பற்றப்பட்ட 321 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 107 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று அழிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் நேற்றைய தினம் புத்தளம் பாலாவியிலுள்ள இன்சீ சீமெந்து தொழிற்சாலை உலைக்குள் போடப்பட்டு எரிக்கப்பட்டது. புத்தளம் மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் மிஹில் ஷிரந்த சத்துருசிங்க முன்னிலையில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2019ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள மேற்படி 107 கிலோ ஹெரோயின் தொடர்பான வழக்கு நிறைவுற்றதையடுத்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பொறுப்பிலிருந்த மேற்படி போதைப்பொருள் 2019ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

107 கிலோ ஹெரோயினுடன் சந்தேகத்துக்கிடமான போதைப் பொருள் 01 கிலோ மற்றும் 104 கிராமுடன் சந்தேக நபர்கள் 09 பேர் இதன்போது கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட அவர்களுக்கு கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பையடுத்து, மேற்படி ஹெரோயினை அழித்துவிடுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி மேற்படி ஹெரோயின் மேல் மாகாணத்தின் மேல் நீதிமன்றத்திலிருந்து புத்தளத்திலுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது.

வழக்கு நடவடிக்கைகள் முடிவடைவதற்கு முன்பதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அந்த போதைப் பொருளை அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

தெற்காசியாவில் கைப்பற்றப்பட்ட பெருமளவு கொகெயின் போதைப் பொருளென கருதப்படும் 928 கிலோ 229கிராம் வரலாற்றில் பகிரங்கமாக முதன்முறை 2018 ஜனவரி 15 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

அவ்வேளையில் இதன் சந்தைப் பெறுமதி 1,400 மில்லியன் ரூபாவாகும். இவை, அன்றைய பொலிஸ் போதைப்பிரிவு ஒழிப்பு பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் கைப்பற்றப்பட்டிருந்தன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT