தமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு | தினகரன்

தமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு

1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தமிழக அரசின் உரிய அனுமதியுடன் நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 453 காளைகள் சீறிப் பாய்ந்தன.

புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 453 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்காக 175 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

இதில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த ஒருவர் புதுக்கோட்டை அரச மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் ஜல்லிக்கட்டாக இருப்பினும் இதில் கலந்துகொண்ட காளைகளுக்கோ, மாடுபிடி வீரர்களுக்கோ ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை.

எதிா்வரும் 20-ம் திகதி விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை ‘கின்னஸ்' சாதனையில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சி நடைபெறுவதும் இம்மாவட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

அவனியாபுரத்தில் போட்டியை யார் பொறுப்பு ஏற்று நடத்துவது, முதல் மரியாதை யாருக்கு அளிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் உயர் நீதிமன்றம் தலையிட்டது. இதனால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

போட்டி நடக்கும் இடத்தில் கட்சி, சமூகம் தொடர்பான கொடிகள், தலைவர்கள் பெனர்கள் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடித்துவைக்கப்பட்டுள்ளதால் அவனியாபுரத்தில் திட்டமிட்ட படி ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடந்தது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1400 காளைகளும் காளைகளை அடக்க 596 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மாடுபிடி வீரர்களுக்கு முதல் முறையாக ரூ.2 இலட்சத்துக்கு அரச சார்பில் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...