Wednesday, April 24, 2024
Home » அமெரிக்காவுடனான முறுகலுக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

அமெரிக்காவுடனான முறுகலுக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

by sachintha
December 15, 2023 6:05 am 0 comment

மழையால் பலஸ்தீனர்களுக்கு மேலும் நெருக்கடி

காசா போரில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை வலியுறுத்தி வரும் சூழலில் இரு தரப்புக்கும் இடையில் முறுகல் அதிகரித்து வருகின்றபோதும் காசா மீதான இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்றைய (14) தினத்திலும் நீடித்தது. அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் ஜெரூசலத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையிலேயே விரிசல் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் தற்போது மூன்றாவது வாரமாக நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகையில் உள்ள காசாவின் பெரும் பகுதி வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக நடைபெறும் தாக்குதல்களில்் அழிவை சந்தித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18,600ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உள்ளனர்.

காசா எங்கும் நேற்றுக் காலை இடம்பெற்ற வான் தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதில் கடந்த புதன்கிழமை இரவு தெற்கு காசாவின் ரபாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் இரு வீடுகளை தாக்கி தரைமட்டமாக்கியுள்ளன. அப்போது அந்த வீடுகளுக்குள் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இருந்துள்ளனர்.

இதனால் 27 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்கள் உட்பட நால்வர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை இரவும் காசா பகுதியில் கடும் மழை மற்றும் காற்று வீசியதால் ஏற்கனவே இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்கள் மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்கள் சீரற்ற காலநிலையால் கிழிந்தும், கூடாரங்களுக்கு நீர் தேங்கியும் உள்ளது. மக்கள் குளிரினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடும்மழையும் புயல்காற்றும் சில இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தின.

ஜபாலியா அகதிகள் முகாம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியதாக அங்கு வசிப்போர் கூறினர். ரபாவிலும் மழையால் பல பிரச்சினைகள் நிலவுகின்றன.

வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசவின் பிரதான நகரான கான் யூனிஸை மையப்படுத்தி இஸ்ரேல் போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் தற்போது மேலும் தெற்காக எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதியில் அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

காசா பகுதியின் சுமார் 85 வீதமானவர்களான 1.9 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் ரபா பகுதியில் தற்போது ஒரு மில்லின் பேர் வரை அடைக்கலம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

62 சதுர கிலோமீற்றர் பகுதியைக் கொண்ட ரபாவில் தற்போது ஒரு சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் சுமார் 16,000 பேர் சிக்கி உள்ளனர். இது நியூயோர்க் (11,313), டோக்கியோ (6,158) மற்றும் லண்டன் (5,598) நகரங்களை விடவும் சனநெரிசல் மிக்க பகுதியாக மாறியுள்ளது. எனினும் இவ்வாறு அடைக்கலம் பெற்ற மக்கள் ஏற்கனவே பட்டினியால் தவித்து வரும் நிலையில் குளிராலும் வாடி வருகின்றனர்.

“நாங்கள் ஐந்து நாட்களை வெட்ட வெளியில் கழித்தோம். இப்போது கூடாரங்களில் நீர் நிரம்பியுள்ளது” என்று இடம்பெயர்்ந்த குடியிருப்பாளர் ஒருவரான பிலால் அல் கசாஸ் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

கடுமையான காற்று பலவீனமான கூடாரங்களை தூக்கி எறியும் நிலையில் அவைகளை பலப்படுத்துவதற்கு மேலும் பிளாஸ்டிக் போர்வைகளை பயன்படுத்தி வருகின்றனர். “எங்கே நாம் புலம்பெயர்வது? எமது கெளரவம் போய்விட்டது. பெண்கள் எங்கே ஆறுதல் அடைவார்கள்? எந்த குளியலறையும் இங்கே இல்லை” என்று 41 வயது கசாஸ் கூறினார்.

இந்நிலையில் மூளைக்காச்சல், மஞ்சள் காமாலை மற்றும் மேல் சுவாசக்குழாய் தொற்று போன்ற நோய்கள் தீவிரம் அடையும் அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

காசாவில் மருத்துவ கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்துள்ளது. சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது ஹமாஸ் நிர்வாகம், அது பேரழிவு மிக்க சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

“தொற்றுநோய்ச் சூறாவளி ஆரம்பித்துள்ளது,” என்று யுனிசெப் அமைப்புக்கான தலைமைப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் 66 வீதம் கூடி 59,895ஆகப் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் எஞ்சிய மக்களிடையே வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் 55 வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் போர் காரணமாக அனைத்து கட்டமைப்புகளும் சேவைகளும் முடங்கிவிட்டதால் இந்த எண்ணிக்கை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை என்று அந்த ஐநா அமைப்பு கூறியது.

வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் வைத்தியசாலையின் வார்டுகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கிச் சூடு நடத்துவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் வெடிப்பதற்கு தூண்டுதலான இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து மேற்குக் கரையிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதில் ஜெனின் நகர் மீது இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு படைகளை இலக்கு வைத்து வீதியில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே படையினர் இந்தத் தேடுதல்களில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்கி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேலுக்கு கடும் வார்த்தை பிரயோகங்களை கடந்த புதனன்று (13) பயன்படுத்தி இருந்தார். காசாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுவதாகவும் அதற்கான சர்வதேச ஆதரவு பலவீனம் அடைந்திருப்பதாகவும் பைடன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் “நாம் முடிவு வரையும், வெற்றிவரையும் செல்வோம். அதற்கு குறைவாக எதுவும் இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.

சர்வதேச ஆதரவுடனோ அல்லது இல்லாமலோ ஹமாஸுக்கு எதிரான போர் தொடர்ந்து நடத்தப்படும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கொஹேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜென் சுலிவன் நெதன்யாகு மற்றும் அவரது போர் அமைச்சரவையுடன் பேசுவதற்காக நேற்று ஜெரூசலத்தை சென்றடைந்தார்.

இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு உரையாற்றிய சுலிவன், இந்த விஜயத்தில் போரை முடிப்பதற்கான கால எல்லை பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக குறிப்பிட்டார். சுலிவன் இஸ்ரேலில் “கடுமையான தீவிர பேச்சுவார்த்தையில்” ஈடுபடுவார் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சின் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்தார்.

போருக்குப் பின்னர் காசாவை நிர்வகிப்பது தொடர்பிலும் அமெரிக்க அரசுடன் நெதன்யாகு முரண்பட்டு வருகிறார்.

எனினும் ஹமாஸ் அல்லது போராட்ட தரப்புகள் இன்றி காசா அல்லது பலஸ்தீனம் தொடர்பான எந்த ஒரு ஏற்பாடும் மாயமானது என்று ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார்.

ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன நாட்டை பெறும் பலஸ்தீன மக்களின் உரிமையை எட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கு ஹமாஸ் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கொள்கை மற்றும் புள்ளிவிபர ஆராய்ச்சிகான பலஸ்தீன மையத்தினால் புதன்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், பலஸ்தீன பகுதிகளின் 78 வீதமான மக்கள் ஹனியேவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். இதுவே போருக்கு முன்னர் 58 வீத ஆதரவே இருந்துள்ளது.

காசா பொதுமக்களின் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தமும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க உளவுப் பிரிவை மேற்கோள்காட்டி சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசாவில் இஸ்ரேல் பயன்படுத்திய வானில் இருந்து தரையை தாக்கும் வெடி பொருட்களில் கிட்டத்தட்ட பாதி அளவானவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வழிகாட்டப்படாதவை என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT