Friday, March 29, 2024
Home » பொருளாதார மீட்சிக்கு உதவும் சர்வதேச நாணய நிதிய உதவி

பொருளாதார மீட்சிக்கு உதவும் சர்வதேச நாணய நிதிய உதவி

by sachintha
December 15, 2023 6:00 am 0 comment

இலங்கை கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்தது. அந்நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான ஆக்கபூர்வ பொருளாதார வேலைத்திட்டங்கள் 2022 ஆம் ஆண்டின் ஜுலை மாதப் பிற்பகுதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதி முதல் மக்களுக்கு நன்மை பயக்கத் தொடங்கின.

இதன் பயனாக பொருளாதார நெருக்கடி காலத்தில் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு அசௌகரியங்களும் நெருக்கடிகளும் கட்டம் கட்டமாக நீங்கலாயின.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு அந்நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளும் சந்திப்புக்களும் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் உடன்படிக்கையும் கடந்த மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கேற்ப இந்நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழ் 48 மாதங்களில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியாக வழங்கப்பட உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிதியுதவி தொடர்பிலான முதலாம் கட்ட மதிப்பீடு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்நிதியப் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டது. அது தொடர்பிலான நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை நேற்றுமுன்தினம் பூர்த்தி செய்துள்ளதோடு, இலங்கையின் பொருளாதார கொள்கை வகுப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவையும் இந்நாட்டுக்கு சாதகமானவையாக அமைந்துள்ளன.

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, செலவின நிலுவைகள் தவிர்ந்த அனைத்து முக்கிய நடவடிக்கைகளும் வரி வருமானம் தவிர்ந்த அனைத்து இலக்கிடப்பட்ட அடைவுகளும் கடந்த ஜுன் மாத இறுதியிலேயே எட்டப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் எட்டப்பட வேண்டிய மிக முக்கிய கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்கள் அக்காலப்பகுதிக்குள்ளோ அல்லது அக்காலப்பகுதிக்கு பின்னரோ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பில் ஆட்சியியல் மதிப்பாய்வொன்றை சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டு அது தொடர்பில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது. ஆசியாவில் இவ்வாறு மதிப்பாய்வுக்கு உள்ளான முதலாவது நாடாக இலங்கை விளங்குகின்றது.

இதேவேளை, கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல், வருமானத்தை அதிகரித்தல், திருப்திகரமான கையிருப்பு அளவை மீளக்கட்டியெழுப்பல், பணவீக்கத்தைக் குறைத்தல், நிதியியல் உறுதிப்பாட்டை பாதுகாத்தல் ஆகிய செயன்முறைகளில் இலங்கை பாராட்டத்தக்க விதத்திலான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான குறிகாட்டிகள் தென்படுகின்றன’ எனவும் குறிப்பிட்டிருக்கிறது சர்வதேச நாணய நிதியம்.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றுகையில், ‘சர்வதேச நாயண நிதியத்தின் இரண்டாவது கடன் தொகைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதன் ஊடாக எமக்கு பல நன்மைகள் கிடைக்கப்பெறும். குறிப்பாக எமது நிதித்துறையில் பெரும் சக்தியாக அமையும் வகையில் வைப்பு காப்பீட்டுத் தொகையாக உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க உள்ளது. அதன் ஊடாக எமது வங்கி மற்றும் நிதித்துறைகள் நூறு வீதம் பாதுக்காக்கப்படும். அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்க்கா நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்தும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பெருந்தொகை நிதி கிடைக்கப்பெற உள்ளது’ என்றுள்ளார்.

இந்நிதியம் இந்நாட்டுக்கு இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்குவதானது, பொருளாதார ரீதியில் நாட்டை மேலும் பலப்படுத்தி மேம்படுத்த வழிவகுக்கக் கூடியதாக அமைந்திருப்பதை ஜனாதிபதியின் தகவல்கள் வெளிப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே பொருளாதார ரீதியில் நாடு நம்பிக்கை தரும் வகையில் முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது. அதன் பயன்களை நாடும் மக்களும் அடைந்து கொள்ளும் காலம் வெகுதொலையில் இல்லை என்பதை உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT