அதிகாரப்பகிர்வு, சமஷ்டி கோரிக்கை தெற்கில் இருந்துதான் வடக்குக்கு சென்றன | தினகரன்

அதிகாரப்பகிர்வு, சமஷ்டி கோரிக்கை தெற்கில் இருந்துதான் வடக்குக்கு சென்றன

தெற்கிலிருந்து சென்ற சமஷ்டி யோசனையை அப்போது நிராகரித்ததன் மூலம் தமிழ் அரசியல் தலைவர்கள் மிகவும் நல்லவர்களாக நடந்துகொண்டுவிட்டனர். அன்று அதனை நிராகரித்ததாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அரசியலமைப்பு சபையில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தேசிய கலந்துரையாடல்கள், நல்லிணக்கம், அரசகரும மொழிகள் மற்றும் இந்துவிவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி தொடர்பிலான யோசனைகள் தெற்கில் இருந்துதான் வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் மலைநாட்டு சிங்களவர்கள் போன்றோர் இந்த கோரிக்கைளை வடக்கிற்கு கொண்டு சென்றனர். அப்போது வடக்கிலிருந்தவர்கள் அதனை நிராகரித்தனர் என்றும் கூறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், என்னை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தல் குழுவுக்கு வந்ததில் இணக்கம் இல்லை. அதிகம் நல்லவர்களாக நடந்துகொண்டுவிட்டனர். அன்றும் அதிக நல்லவர்களாக இருந்துவிட்டனர். அதனால்தான் தெற்கிலிருந்து பண்டாரநாயக்க கொண்டு சென்ற சமஷ்டி கோரியதை நிராகரித்து ஒற்றையாட்சியில் வாழ்வோம் எனக் கூறியிருந்தனர். நானாக இருந்தால் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் அமர்ந்திருக்க மாட்டேன். சிங்கள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு தீர்வை சர்வதேசத்திடம் முன்வையுங்கள் அதனை நாங்கள் பரிசீலிக்கின்றோம் எனக் கூறியிருப்பேன். அதிக நல்லவர்களாக நடந்துகொண்டதால்தான் இங்கு வந்து அமர்ந்துள்ளனர்.

அதிகாரப் பகிர்வு, சமஷ்டி என்பன வடக்கில் இருந்து வந்தது; அமெரிக்காவில் இருந்த வந்தது; இந்தியாவில் இருந்து வந்தது எனக் கூற வேண்டாம். தெற்கில் இருந்துதான் அது வடக்கிற்குக் சென்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று வடக்குத் தமிழர்களின் பிரச்சினையை வெறும் பொருளாதார பிரச்சினையாக மாத்திரம் மட்டுப்படுத்திவிட வேண்டாம். தெற்கை போன்று வடக்கிற்கும் அபிவிருத்தி அவசியம். பாதைகளும், வைத்தியசாலைகளும், பாடசாலைகளும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரமும், தீர்மானிப்பும் வடக்கில்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...