ஒற்றை ஆட்சி முறையில் மாற்றம் செய்யப்படாது | தினகரன்

ஒற்றை ஆட்சி முறையில் மாற்றம் செய்யப்படாது

நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் உடன்பாடில்லை

பௌத்த மதத்துக்கான முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி முறை என்பவற்றில் எந்த மாற்றங்களும் இன்றியே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். அரசியலை முன்னெடுக்க எந்தப் பேசுபொருளும் இல்லாதவர்களே நாடு பிளவுபடப்போகிறது, பௌத்தத்துக்கான முன்னுரிமை இல்லாமல் செய்யப்படுகிறது என்ற பிரசாரங்களை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சபையே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்றையதினம்(11) அரசியலமைப்புச் சபை கூடியது. காலை 10 மணிக்கு கூடிய அரசியலமைப்புச் சபையில் வழிநடத்தல் குழுவின் தலைவர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கைகள் சிலவற்றை சபையில் சமர்ப்பித்தார். வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை மற்றும் உப குழுக்களின் அறிக்கைகள் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட விவாதத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த முக்கியமான கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகள் என்பவற்றை பிரதமர் சபையில் சமர்ப்பித்தார்.

இவற்றை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர், நாடு பிளவுபடப்போகிறது, பௌத்தத்துக்கான முன்னுரிமை நீக்கப்படப்போகிறது, இதற்கான அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என கடந்த சில நாட்களாக பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். நாம் அரசியலமைப்பின் வரைபு எதனையும் தயாரிக்கவில்லை. நிபுணர்கள் குழுவின் அறிக்கையையே சமர்ப்பிக்கின்றோம். அது மாத்திரமன்றி உப குழுக்களின் அறிக்கைகளையும் சமர்ப்பிக்கின்றோம். இந்த அறிக்கைகளை ஆராய்ந்து விவாதமொன்றை நடத்தமுடியும். அவ்வாறு நடத்தும் விவாதத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தல் குழுவினால் அரசியலமைப்புக்கான வரைபை தயாரிக்க முடியும்.

எவ்வாறு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பதை அரசியலமைப்பு சபையே தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்புச் சபை எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய வழிநடத்தல் குழு செயற்படும்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை.

அதேபோல ஒற்றையாட்சிமுறையும் மாற்றம் செய்யப்படமாட்டாது. இது தொடர்பில் இணக்கப்பாடு காணப்படுகிறது. ஒற்றையாட்சி என்ற விடயத்தில் தமிழில் பொருத்தமான சொற்பதம் குறித்த பிரச்சினையே காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தமது அரசியலை முன்கொண்டு செல்வதற்கு எந்தவிதமான பேசுபொருளும் இல்லாதவர்களே நாடு பிளவுபடப்போகிறது, பெடரல் முறையில் வரைபு முன்வைக்கப்படப்போகிறது, பௌத்தத்துக்கான முன்னுரிமை இல்லாமல் செய்யப்படப்போகிறது என்ற பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...