அரச நிறுவனங்களில் எந்தவொரு பழிவாங்கல்களும் இடம்பெறவில்லை | தினகரன்

அரச நிறுவனங்களில் எந்தவொரு பழிவாங்கல்களும் இடம்பெறவில்லை

இடமாற்றம், பணி இடைநிறுத்தம் செய்ய அரசு முயற்சிக்கவுமில்லை

அரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு ஊழியரையும் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யவோ பணியிலிருந்து இடைநிறுத்தவோ அரசாங்கம் முயற்சிக்கவில்லையென பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பிரதமர் சார்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐ.ரி.என் நிறுவனம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களில் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றங்கள் வழங்கப்படுவதுடன், சிலர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியிருந்தார்.

தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர், எமது அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் எந்தவொரு இடமாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், எவரையும் பழிவாங்குவதற்காக சேவையிலிருந்து இடைநிறுத்தவுமில்லை.

அரசாங்க திணைக்களங்கள், சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணியாற்றுபவர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதை நாம் நோக்காக் கொண்டுள்ளோம். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...