புதிய யாப்பு விடயத்தில் எதிரணியின் பொய் முகம் | தினகரன்


புதிய யாப்பு விடயத்தில் எதிரணியின் பொய் முகம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அரசியலமைப்புச்சபை நேற்று வெள்ளிக்கிழமை கூடியது. இந்த அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில அறிக்கைகளை சபையில் சமர்ப்பித்திருக்கின்றார். வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை, உப குழுக்களின் அறிக்கைகள் இடைக்கால அறிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட விவாதத்தின் போது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளையே பிரதமர் சபையில் சமர்ப்பித்தார்.

எதிரணித் தரப்பினரால் கடந்த சில தினங்களாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட தவறான பிரசாரங்கள் புஸ்வாணமாகிப் போனதை இங்கு நன்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அரசியலமைப்பு நகல்களோ, வேறு விதமான அரசியலமைப்பு மாற்றங்களோ எதுவுமே நேற்றைய அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க்பபடவில்லை. அரசியலமைப்பை தயாரிக்கக் கூடியதான ஆரம்பப் புள்ளிகூட இன்னமும் இடப்படவில்லை என்பதை நேற்றைய கூட்டத்தின் போது அறிந்துகொள்ள முடிகின்றது. அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் அடுத்து என்ன செய்வது என்பதை அரசியலமைப்புச் சபையே தீர்மானிக்க வேண்டுமென்பதை பிரதமர் இங்கு வலியுறுத்தியிருக்கின்றார்.

எதுவுமே இல்லாத ஒன்றை வைத்துக்கொண்டு எதிரணித்தரப்பு பௌத்த சிங்கள சமூகத்தை தவறாக வழிநடத்தி திசைதிருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை வெளிப்படையாகவே நோக்க முடிகின்றது. இதன் மூலம் தொடக்கத்திலேயே மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு இவர்கள் எத்தனித்து வருகின்றனர். பூஜ்யமாக இருக்கும் ஒரு விடயத்தை பூதமாகக் காட்டும் ஒரு வேலையை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

நிபுணர்கள் குழு உட்பட ஏனைய குழுக்களின் அறிக்கைகளையம் இடைக்கால அறிக்கை குறித்த விவாதக் கருத்துக்களையும் உள்வாங்கிய அறிக்கையை மட்டுமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பித்திருக்கின்றார். நேற்றைய கூட்டத்தில் அரசியலமைப்பு தொடர்பில் எந்த விதமான முன்யோசனையும் பிரதமர் தரப்பினாலோ வேறு எவருமோ முன்வைக்கவில்லை. அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் எந்த முடிவையும் அரசியலமைப்புச் சபையே எடுக்க வேண்டும் என்பதை இங்கு பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

பிரதமர் இங்கு உரையாற்றும் போது மிக முக்கியமான சில கருத்துக்களை ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறாது ஒரு புள்ளியைக்கூட மாற்றப் போவதில்லை என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். பௌத்த மதத்துக்கான முன்னுரிமை, ஒற்றையாட்சி முறை என்பவற்றில் எந்த மாற்றங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்பதை பிரதமர் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கின்றார்.

இன்றைய காலச் சூழலில் தங்களுக்கு மக்கள் முன்தோன்றி அரசுக்கு எதிராக சொல்வதற்கு பேசுபொருள் இல்லாதநிலையில் எதிரணியினர் நாடு பிளவுபடப் போகின்றது என்ற மாயையை ஏற்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றனர். என்றும் பிரதமர் தெரிவித்திருக்கின்றார். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை இந்த நாட்டில் வாழும் எந்தவொரு சமூகமும் எதிர்க்க முற்படவில்லை. முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர். இல்லாதவொன்றை உருவாக்கி மக்களை திசைதிருப்பும் முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. தேசம் பிளவுபடுவதை எந்தவொரு சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் தவறான கோஷங்களை எழுப்புவோர் விடயத்தில் மக்கள் விழிப்படைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி என்ற விடயத்தில் காணப்படும் பொருள் மயக்கம் குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஒற்றையாட்சி முறையிலும் எதுவித மாற்றமும் இடம்பெறாது என்பதை பிரதமர் உறுதிப்படுத்தி இருக்கின்றார். அரசியலமைப்பு வரைபு எதுவுமே இதுவரை தயாரிக்கப்படவில்லை. அதனைச் செய்ய வேண்டிய கடப்பாட்டை அரசியலமைப்புச் சபையே கொண்டிருக்கின்றது. அதற்கு முன்னர் இதுவிடயத்தில இன்னமும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அரசியலமைப்புச் சபையே தீர்மானிக்க வேண்டும். அதனை வேறு எவராலும் தீர்மானிக்க முடியாது. அரசியலமைப்புச்சபை எடுக்கும் தீர்மானத்திற்கமைய வழிநடத்தல் குழு செயற்பட முடியும். என்பதை அரசியலமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் முழு பாராளுமன்றமுமே அறிந்தவிடயமாகும். இவ்வளவு தெரிந்த நிலையிலும் தமது வங்குரோத்து அரசியலை தூக்கி நிறுத்திக்கொள்வதற்கான முனைப்பில் எதிரணியினர் முயற்சிப்பது வெட்கப்பட வேண்டியதொன்றாகும்.

அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் பிரதமர் இந்த விடயங்களை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி விளக்கமளித்த நிலையிலும் கூட எதிர்க்கட்சித் தலைவர் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டவர் போன்று தனது பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாட முற்படுகின்றார். அவரது உள்ளக்கிடக்கையை ஆழமாக கவனிக்கின்ற போது மீண்டும் இந்த நாட்டை இன வாதத்தின் பக்கம் இட்டுச் செல்ல முயச்சிப்பதையே ஒளிவுமறைவின்றி பார்க்க முடிகின்றது.

நாட்டை மீண்டும்அழிவுக்குள் தள்ளிவிடும் முயற்சியை எவருமே அனுமதிக்க முடியாது. நாட்டு மக்கள் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் போதாதா? இனம், மதம், மொழி பேதம் கடந்து அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இணங்கி வர வேண்டுமென்பதே எமது பகிரங்கமான அழைப்பாகும். “இணங்கிவாழ்வோம், இணைந்து வாழ்வோம்’ என்ற தாரக மந்திரத்தை எல்லோரும் ஒன்றாக உச்சரிப்போமாக.


Add new comment

Or log in with...