ஊழல் மோசடி தகவல் வழங்குவதற்கு ஐ.சி.சியினால் 2 வாரகால அவகாசம் | தினகரன்

ஊழல் மோசடி தகவல் வழங்குவதற்கு ஐ.சி.சியினால் 2 வாரகால அவகாசம்

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் இரண்டு வாரங்கள் விசேட பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை திரட்டவும், அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரி ஸ்டீவ் றிச்சர்ட்சன் (09) இலங்கைக்கு வருகை தந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இலங்கை அணியில் தற்போது விளையாடி வருகின்ற வீரர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், இலங்கை கிரிக்கெட் யாருக்கு சொந்தமானது? இது விளையாட்டுத்துறை அமைச்சருக்கோ, விளையாட்டு அதிகாரிகளுக்கோ அல்லது அதன் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கோ சொந்தமானது கிடையாது. இலங்கை கிரிக்கெட் உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. எனவே இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளை முற்றிலும் அகற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட்டில் பிரச்சினைகள், முரண்பாடுகள், ஊழல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஊடுருவி இருந்ததை நன்கு அறிய முடிந்தது. எனவே கிரிக்கெட்டை பாதுகாக்க உங்களால் மாத்திரமே முடியும். நீங்கள் தான் கிரிக்கெட்டின் உண்மையான சொந்தக்கார்கள். உங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் குறித்து நான் மிகுந்த அவதானத்துடன் உள்ளேன். வீரர்களுக்கு கிடைக்கின்ற சம்பளம் எவ்வளவு? இரண்டாம் பிரிவு கிரிக்கெட் விளையாடுகின்ற வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகின்றது, வீரர்களின் ஒப்பந்தங்கள் தொடர்பில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இதுஇவ்வாறிருக்க,சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் எம்மீது மிகப்பெரிய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. நான் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கையோடு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகளைச் சந்திக்க டுபாய் சென்றேன். அப்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடுமையான ஊழல் மோசடிகள் இடம்பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இலங்கை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருந்தனர். அந்த வார்த்தையை கேட்டவுடன், இலங்கை கிரிக்கெட்டை விரும்புகின்ற சாதாரண ஒரு கிரிக்கெட் ரசிகனாக நான் மிகவும் கவலைப்பட்டேன் என்றார்.

கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக தாங்கள் அறிந்த விடயங்களையும் தங்களால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்களையும் இலங்கை வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவினரிடம் அறிவிப்பதற்கு ஏதுவாக ஐ.சி.சியினால் இரண்டு வாரங்கள் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் ஐ.சி.சியின் விசேட பிரிவொன்று இலங்கையில் இயங்கவுள்ளது. அவ்வாறு நீங்கள் ஏதாவது தவறுகள் செய்தால் அல்லது அதனுடன் தொடர்புடைய நபர்களை அறிந்திருந்தால் அங்குசென்று தெரிவிக்க முடியும். அதேபோல, அவ்வாறு நேர்மையாகச் சென்று தகவல்களை வழங்குகின்ற வீரர்களின் பெயர் விபரங்களை வெளிவராமல் பாதுகாப்பது எனது பொறுப்பாகும். நீங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள்.

கிரிக்கெட்டில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடிகளை தடுப்பதற்கு விசேட சட்டமொன்றை கொண்டுவருவதற்கு தேவையான விதிமுறைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். அதேபோல, குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பித்து அதை நிறைவேற்றவும் எதிர்பார்த்துள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அது நிரூபிக்கப்பட்டால் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை வழங்கவும், மிகப்பெரிய தொகை பணத்தை அபராதமாக அறவிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விசேட சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு ஸ்டீவ் றிச்சர்ட்சன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பீ.எப் மொஹமட்


Add new comment

Or log in with...