குழந்தையின் சீரான வளர்ச்சியை கண்காணிப்பதில் கவனம் தேவை | தினகரன்

குழந்தையின் சீரான வளர்ச்சியை கண்காணிப்பதில் கவனம் தேவை

குழந்தையின் வளர்ச்சியென்பது தாய் கருத்தரித்தலுடனேயேஆரம்பமாகி விடுகிறது. கற்றல்,கற்பித்தலைச் சரியாகப் புரிந்து கொள்ள குழந்தையின் வளர்ச்சியியல்புகளைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். வளர்ச்சிக்குஅடிப்படையாகவிருக்கும் சிறப்பியல்புகள்,உடல் வளர்ச்சி,மனவெழுச்சி வளர்ச்சி,சமூக வளர்ச்சி,அறிவு வளர்ச்சி,மொழி வளர்ச்சி,படைப்பாற்றல் வளர்ச்சி,மனப்பாங்கு வளர்ச்சி என்பனவற்றைப் பொறுத்து எவ்வாறான கண்காணிப்பு தேவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்காணிப்பதனாலேதான் குறையைக் கண்டறிந்து பூர்த்தியாக்க முடியும்.குழந்தை இயற்கையாகவே வளரும் இயல்பு கொண்டதாயினும்,அதன் தேவைகள் பூர்த்தியாக்கப்படவும், பாதுகாப்புக் கிடைக்கவும் கண்காணிப்புஅவசியமாகிறது.

குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் சிறப்பியல்புகள் சில உள்ளன.அவற்றை முன்பள்ளிஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டும். அதேவேளைஅவற்றைப் பொறுத்து கண்காணிப்பும் அவசியமா என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

குழந்தையின் வளர்ச்சிஅதன் பாரம்பரியக் காரணியும் சூழற்காரணியும் இடையறாது இடைவினை ஆற்றுவதன் விளைவினால் ஏற்படுவதாகும்.பாரம்பரியம் என்பது தாயாலும் தந்தையாலும் குழந்தைக்குக் கிடைக்கும் இயற்கைச் சக்தியாகும். சூழ்நிலை என்பது குடும்பச் சூழலிலும் பாடசாலைச் சூழலிலும் குழந்தைக்குக் கிடைக்கும் அனுபவம், ஊக்கம், உதவிகள் முதலியனவாகும். சூழலில் குழந்தைக்குக் கிடைக்கும் வெற்றி,தோல்விகள் முதலியன அனைத்தும் அடங்கிய ஒரு நிலையே சூழல் ஆகும்.

வளர்ச்சி நிலையில், ஆசிரியரும் பெற்றோரும் குழந்தைக்கு அளிக்கும் உதவி, ஒத்தாசை, ஊக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. அவை குழந்தையின் வளர்ச்சிக்கு, சரியாக போதிய அளவு கிடைக்கின்றதா என்பது கண்காணிக்கப்பட வேண்டியதாகும். அதற்குப் பொறுப்பேற்பவர்கள் பெற்றோரும் ஆசிரியருமாவார்.

வளர்ச்சி இடையறாது மெதுவாக நடைபெறுவதாகும்

எல்லாக் குழந்தைகளுக்கும் ஒழுங்கான வளர்ச்சிக் கோலங்கள் உள்ளன.உதாரணமாக, குழந்தை நடக்கமுன் நிற்கப் பழகுகிறது. நன்றாகப் பேசுமுன் மழலைமொழிகிறது. உண்மை பேசுமுன் பொய் புனைகிறது. சதுரம் வரையும் முன் வட்டம் வரைகிறது. பொதுநலத்தைக் காட்டுமுன் தன்னலம் காட்டுகிறது. இவைவளர்ச்சிக் கோலங்களாகும். எனவேகுழந்தைகள் நமது அவசரத்துக்கு வளர்வதில்லை என உணர்ந்து இந்த வளர்ச்சிக் கோலங்களில் தடுமாறாதிருக்க பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

குழந்தையின் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்தாலும்,அதன் வேகம் அடிக்கடி மாற்றமுறுகிறது. குழந்தை குழவிப் பருவத்திலும் பாடசாலை செல்வதற்கானஆரம்ப காலத்திலும் வேகமாக வளர்கிறது. பாடசாலைக் காலத்தில் வளர்ச்சி வேகம் மெதுவாக அமைகிறது.

குழந்தைகளின் வளர்ச்சி தலையில் தொடங்கி காலில் முடிவுறுகிறது. குழந்தைஅமர்வதற்குமுதல் தலைநிமிர்த்துவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வளர்ச்சி முழுமையில் தொடங்கி பகுதிகளில் முடிவடைகிறது. குழந்தையின் காலைக் கிள்ளினால் காலை மட்டும் அசைக்கிறது. முதலில் கையசைவும் அதன் பின்னர் விரல் அசைவும் நிகழ்கின்றன. இதனால் வளர்ச்சிக்குத் திட்டமான நெறிகளும் வகைகளும் உள்ளனஎன்பதைஉணர்ந்துஅதற்கேற்பக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளல் வேண்டும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்குஅடிப்படைத் தேவையுள்ள சூழல் அமையாவிடில் வளர்ச்சி வீதமும்,வளர்ச்சிக் கோலமும் பாதிக்கப்படும். எனவே குழந்தையின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தமான சூழ்நிலை அமைய வேண்டும். உணவு,செயற்பாடு,ஓய்வு,நல்ல மனநிலை,ஒழுங்குமுறை என்பன குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். இவை நன்னிலையில் அமைகின்றனவாவெனக் கண்காணித்தல் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன.அதனால் பெற்றோர் குழந்தை வளர்ச்சியில் இவ்வாறான வளர்ச்சி வேறுபாடுகள் இயற்கையானவையென்பதையுணர்ந்து குழந்தைகளோடு இயல்பாக நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தையின் உடலுறுப்புக் குறைபாடுகள் மனப்பாதிப்புக்களையும்,நடத்தைப் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். அது சமூகப் பொருத்தப்பாடுகளிலும் தாக்கம் விளைவிக்கலாம். இத்தொடர்புகளை பெற்றோரும் ஆசிரியரும் அறிந்திருந்தால் அதற்கேற்ப குழந்தைகளைப் பேணவும் கண்காணிக்கவும் வசதியாயிருக்கும். இவ்வாறான வளர்ச்சி பற்றிய உண்மைகளை அறிந்து,குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தக்க சூழ்நிலைகளை நல்கி,ஏற்ற பயிற்சிகளையும் கொடுத்து கண்காணித்து வரல் குழந்தை விருத்திக்குப் பெரிதும் உதவும்.

ஆகவே முன்பள்ளி பிள்ளைகளின் வளர்ச்சியானது கல்வி நிலையின் அடிப்படையாக இருந்து வருகின்றது. இவை குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படப்பட வேண்டியதொன்றாகக் காணப்படுவதோடு சிறந்த கண்காணிப்பு முறையையும் கொண்டதாக அமைக்கின்றது. ஆகவே குழந்தையின் வளர்ச்சியின் அடிப்படையில் கல்வி சார்ந்த ஆற்றல்களும் இயல்பாகவே உருவாகத் தொடங்கின்றன எனலாம்.

சி. அருள்நேசன்
கிழக்குப் பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...