சிறார்கள் சீரழிக்கப்படுவதற்கு காரணம் பெற்றோரின் அலட்சியம் | தினகரன்


சிறார்கள் சீரழிக்கப்படுவதற்கு காரணம் பெற்றோரின் அலட்சியம்

சமூகத்தில் தலைவர்கள் உருவாக்கப்படுவது சிறுபராயத்திலிருந்தே என்கிறது தத்துவம். சிறுவர்கள் நாளைய சமூகத் தலைவர்கள், அவர்கள் சமூகத்தின் அடையாளம் என்று சிலாகித்துப் பேசுவது ஒரு கல்வித் திட்டம்போல் ஆகிவிட்டது இன்றைய காலத்தில்.

சிறார்களை அன்புடன் அரவணைத்த காலம், நம்மை விட்டு - மெல்ல மெல்ல தொலையத் தொடங்கியுள்ளது. சிறுவர்களை ஆபாசத்துடன் நோக்கும் சில கயவர்களினால் வந்த வினை இது.இவ்வாறான தீயவர்களால் எமது ஒட்டுமொத்த சமுதாயத்துக்ேக தலைக்குனிவு.

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய புள்ளிவிபரங்கள், நம்மை அச்சத்துக்குள் தள்ளுகின்றன.

இன்றைய நவீன சூழலில் சமூகங்களை வெகுவாகப் பாதித்துள்ள ஒரு விடயம்தான் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமாகும். சிறார்களிடத்தில் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முனையும் வன்மம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு வருகின்றது. இதற்கு காரணங்கள் என்ன என்பதைத் தேட வேண்டி தேவை ஒருபுறம் எழுந்துள்ள போதும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்கிற கொடுஞ் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இலங்கையில் பல்வேறு மூலைமுடுக்குளிலும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அது தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது அவசியம். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு மிக முக்கிய காரணம், இன்றைய உலகில் செல்வாக்குச் செலுத்திவரும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களாகும். நம்மில் அதிகம்பேர் தமது பிள்ளைகளிடம் நவீன தொடர்பு சாதனங்கள் இல்லாது இருப்பதை அகௌரவமாகக் கருதுகின்றனர். இவ்வாறான சிந்தனை கொண்ட பெற்றோர் இருக்கும் வரை இதன் பாதிப்புகளில் இருந்து சிறுவர்களை இலகுவில் மீட்க முடியாது.

சிறுவர் துஷ்பிரயோகம் எல்லாச் சமூகங்களில் நிகழ்ந்து வருகின்றது.அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டு கொள்வதில் சமூகத்தின் அக்கறை போதுமானதாக இல்லை என்கிற கருத்தை நாம் ஏற்றுக் கொள்தல் அவசியம்.

சிறுவர் துஷ்பிரயோகம் மூன்று வகைப்படுகிறது. அவை உடலியல், பாலியல், உளவியல் (புறக்கணிப்பு) சார் துஷ்பிரயோகங்களாகும்.

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களில் அதிகமானவை சிறார்களுக்கு நெருங்கிய உறவினர்கள் ஊடாகவே இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் கொடுமை செய்யக் கூடியவர்கள் யார்? என்கிற கேள்விக்குப் பின்னாலுள்ள விடைகள் ஆச்சர்யம்மிக்கவையாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனைவருமே போதைக்கு அடிமையானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உளவியல் சிக்கலுக்குள்ளானவர்கள் மட்டுமே என்ற தவறான கருத்து நம்மிடையே பதிந்திருக்கின்றது. உண்மையில் அவர்கள் நாம் சந்தேகம் கொள்ளாத ஒருவராகவும் இருக்கலாம். வெளிநபராகவும் இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள்தான் என்று வகைப்படுத்த முடியாது. படித்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், கௌரவமான குடும்பத்தில் இருப்பவர்கள், சிறிய வயதுடையவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் போன்ற அடையாளங்களால் நாம் நம்பிக்கை கொள்வது தவறாக முடிந்து விடக் கூடும்.

பாலியல் கொடுமைக்குள்ளான குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில், 60 சதவீத குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர், சிறுமிகளுக்கு சூடு வைத்த பெற்றோர் எமது சமூகத்தில் இல்லாமலில்லை. தந்தை குடிபோதையில் வீட்டுக்கு வந்து சிறார்களுக்கு இம்சை கொடுத்த சம்பவங்கள் ஏராளம். சில நிகழ்வுகள் பதிவு செய்ய முடியாதளவு இருக்கின்றன.

இவ்வாறான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு குடும்பச் சூழல் மிக முக்கிய காரணமாகும். பெற்றோரில் யாராவது ஒருவர் வெளிநாடு செல்வதால், பிள்ளைகள் எதிர்கொள்கின்ற துஷ்பிரயோகங்கள் வித்தியாசமானவையாகும். பெற்றோர் இருவரும் வெளிநாடு செல்லும் போது அல்லது விவாகரத்து பெறுவதனால், அவர்களின் பிள்ளைகள் - குடும்ப உறவுகளால் வேறு வகையான துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும், தனிமை மற்றும் உறவுகள் முறைகள் கட்டுப்பாட்டுடன் பேணப்படாமை காரணமாகவும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான வழிகள் திறந்து விடப்படுகின்றன.

குறிப்பாக பாடசாலைகளுடன் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட தொடர்பின்மையானது, சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் நிகழ்வதற்கான காரணிகளுள் ஒன்றாகும். இப்போதுள்ள அவசர உலகின் வேலைப்பழு காரணமாக, பிள்ளைகளை பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் அனுப்பி விட்டு பெற்றோர் நிம்மதியாக இருந்து விடுகின்றனர். பிள்ளை பாடசாலைக்கு சென்றதா,இல்லையா என்பது பற்றியெல்லாம் எந்த அவதானிப்பும் இல்லாமல் இருந்து விடுகின்றனர். இவ்வாறான நிலையில், நிறையவே மோசமான சம்பவங்கள் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகின்றது.

பாடசாலை சிறார்களுடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பலர் தொடுகையில் தொடங்கி பெரும் துஷ்பிரயோகங்கள் வரை புரிவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரத்தியேக கல்விக்கு சிறார்களை அனுப்புகின்றபோது ஆடை விடயத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். இப்போதுள்ள சூழலில் எல்லா விடயங்களிலும் மிக அவதானமாக இருத்தல் அவசியம்.

நம்மவர்களில் கணிசமானோர் பணம் உழைக்க வெளிநாடு செல்கின்றனர். இதன் மூலம் அவர்கள் பொருளாதாரத்தினை மட்டுமே சம்பாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சிலவேளைகளில் அவர்கள் இழக்கும் விடயங்கள், கோடிகள் கொடுத்தாலும் பெற முடியாதவையாகும்.

தனது பிள்ளை, பிள்ளையின் அன்பு, பாசம் மற்றும் எதிர்காலம் போன்ற எல்லாவற்றையும் தொலைத்து விட்டு, பொருளாதாரம் தேடுகின்ற பெற்றோர்களால் எதனை சாதிக்க முடியும்? அவர்களால் உருவாக்கப்படும் எதிர்கால சந்ததி எவ்வாறு அமையப் போகின்றது.

குறிப்பாக சுயதொழில் முயற்சி அற்றுப் போன சமூகத்தில் தொழிலுக்காக ஆண், பெண் இருபாலாரும் வெளிநாடு சென்று உழைப்பதில், அதிக அக்கறை காட்டுகின்றனர். அதனால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகளவான நடைபெறும் இடமாக கொழும்பு மாவட்டமும், இரண்டாவதாக கம்பஹா மாவட்டமும், மூன்றாவதாக குருநாகல் மாவட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

சிறுவர் வன்முறை தொடர்பில் 2008 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுவதுடன் சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர்களைத் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மட்டும் 64,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவிக்கின்றது.

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான தண்டனைகளை அரசு இன்னும் கடுமையாக்க வேண்டும்.

சமூக, சமய நிறுவனங்கள், இது விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அவசரமாகத் துடைத்தெறியப்பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்குத் தவறுவோமானால் நெறிபிறழ்வான, குற்றச்செயல்கள் மலிந்து காணப்படுகின்ற ஒரு மோசமான சமூகச் சூழல் உருவாகுவதனை யாராலும் தடுக்க முடியாமல் போகும்.

றிசாத் ஏ காதர்
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)


Add new comment

Or log in with...