தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி | தினகரன்


தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி

விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டு உருவாக்கம்

தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது. பத்துக்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளுடன் விழுப்புரம் மாவட்டம் பெரிதாக இருப்பதால் நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதன் காரணமாக, விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தலைமையில் தனி மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டசபையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

ஒருங்கிணைந்த கடலுார் மாவட்டத்திலிருந்து 1993 செப்டம்பர் 30ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் விழுப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது. இது நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்டம். மொத்தம் 7,194 சதுர கி.மீ. பரப்பளவு உடையது. இம்மாவட்டத்தில் விழுப்புரம், வானுார், திண்டிவனம், மயிலம், செஞ்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் என 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 34.58 இலட்சம். மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில், 13 நிருவாகப் பிரிவுகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், மூன்று நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 1,099 ஊராட்சிகள், நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன.

இம்மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மக்கள் அதன் தலைநகரமான விழுப்புரம் வந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டனர்.

எனவே 'விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்' என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சட்டசபையில் நேற்று முன்தினம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

அப்போது புதிய மாவட்ட அறிவிப்பை அவர் வெளியிட்டார். முதல்வர் கூறியதாவது: சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம்; உளுந்துார்பேட்டை, எம்.எல்.ஏ., குமரகுரு ஆகியோர் விழுப்புரம் பெரிய மாவட்டமாக உள்ளதால் அதை பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதாக என்னிடம் தெரிவித்தனர். அதை பரிசீலித்து விழுப்புரம், பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக அதை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிய மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...