மக்களை அச்சுறுத்தும் வீண் பிரசாரங்கள்! | தினகரன்

மக்களை அச்சுறுத்தும் வீண் பிரசாரங்கள்!

அரசியலமைப்புச் சபை இன்று வெள்ளிக்கிழமை கூடுகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்​ைறய தினம் சமர்ப்பிக்கப்படுகிறது. இன்றைய அரசியலமைப்புச் சபை கூட்டத்தின் போது நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு மாத்திரமே கருத்துக் கூற இணக்கம் காணப்பட்டுள்ளது. அரசியலமைப்புக் குழுவினது வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதன்கிழமை கூடிய கூட்டத்தின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில் அரசியலமைப்புப் பேரவைக்கு கட்சிகள், சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள், கருத்துகளை ஆராய்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2015 ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டு வருவது முக்கியமானதொன்றாகும். அதன் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது.

அதன் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் முரண்பாடான கருத்துகள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு எதிரானதெனவும் அச்சுறுத்தலானதெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத் தடைகள், நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசியலமைப்பு அனைத்துமே நாட்டுக்குப் பாதகமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டுகள் சரியானதுதானா எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியலமைப்புப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் உள்ளடக்கப்பட்டே உள்ளார். அரசியலமைப்பு எவ்வாறாக அமைதல் வேண்டும், என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் அந்த நிபுணர் குழுவுக்கு முன்வைக்க முடியும். ஜனநாயக பாரம்பரியத்தைப் பேணும் ஒரு நாட்டில் இதற்கு நல்ல அவகாசம் இருக்கின்றது. அதுதான் யதார்த்தம்.

அரசியலமைப்பு குறித்து எந்தவொரு அறிக்கையும் நிபுணர் குழு முன்னிலைக்குச் சமர்ப்பிக்கப்படாத நிலையில் புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவதன் பின்னணி என்ன? இந்த விடயத்தில் ஆளும் தரப்புக்கும், தமிழ்த் தரப்புக்கும் முடிச்சுப் போட்டு தெற்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் வீணான பீதியை உண்டாக்க முயற்சிப்பதாகவே இதனை நோக்க முடிகிறது. நாட்டில் மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி குழப்ப நிலை உருவாக்கப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

அரசியல் பண்பாடு, கலாசாரம் நேர்வழியில் இருக்க வேண்டும்.அதற்கு களங்கம் ஏற்படக் கூடிய விதத்தில் செயற்பட எவரும் முனையக் கூடாது. அரசியல் செயற்பாடுகள் தூய்மையானதாக அமைய வேண்டும். அதன் மூலமே நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவது போன்று புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் என்ற கூற்றுக்கு அவர் காட்டும் காரணி அரசியலமைப்புப் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் யோசனைகள் நாட்டில் சுயாதீனமான நிருவாக முறையை தோற்றுவித்து அதன் மூலம் சமஷ்டியாட்சியை அமைத்து விடும் என்பதாகும். அதிகாரங்கள் பரவலாக்கப்படுவது தவிர்க்க முடியாதவையாகும். எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவது போன்று புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்றால் அதனை அரசியலமைப்புச் சபை கூட்டத்தில் எதிர்த்து அந்த யோசனைகளை நிவர்த்திக்க முடியுமே! ஏன் அங்கு பேசாமல், மக்களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

புதிய அரசியலமைப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை பாராளுமன்றத்திலும், அரசியலமைப்புச் சபையிலும் பேசித் தீர்வு காணலாமே... பாராளுமன்றில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளே. அவர்கள் நாட்டு மக்கள் பக்கம் சார்ந்துதான் குரல் கொடுப்பார்கள். இந்த விடயத்தில் மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்தக் கூடாது. அரை நூற்றாண்டு காலமாக இந்த நாடும், மக்களும் எதிர்க் கொண்ட சவால்களை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நாட்டின் எந்தவொரு பிரஜையும் மீண்டும் வன்முறையையோ, இரத்த ஆறு ஓடுவதையோ விரும்ப மாட்டான். மக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

பல தடவை திருத்தம் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பை வைத்துக் கொண்டு தேசத்தை அழிவு நிலைக்குக் கொண்டு செல்வதை விட ஆரோக்கியமான, எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தவறு எதுவும் இருக்க முடியாது. ஒரு சமூகத்தை இலக்கு வைத்து சாடும் விதத்தில் புதிய அரசியலமைப்பு குறித்து எவரும் கருத்து வெளியிடுவது ஆரோக்கியமானதாக அமைய மாட்டாது.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் சகல கட்சிகளும் நடந்து கொள்ள வேண்டும். திறந்த மனதுடன் நல்லெண்ணத்துடன் செயற்பட்டால் நிச்சயமாக தேசத்துக்கு நல்லதொரு எதிர்காலத்தைக் கொண்டுவர முடியும்.


Add new comment

Or log in with...