ஸ்ரீல.சு.கவிலிருந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதே இலக்கு | தினகரன்

ஸ்ரீல.சு.கவிலிருந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதே இலக்கு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியுடன் இணைய முன்வருமாறு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நேற்று காலை தனது பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்ட தயாசிறி ஜயசேகர எம்.பி ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

" கட்சியை பிரிப்பதற்காக அல்ல, அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காகவே நான் இப்பதவியை பொறுப்பேற்றுள்ளேன். சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுன கட்சிக்கு சென்றவர்களும் சுதந்திரக் கட்சியை விட்டு சென்ற ஏனையோரும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கு இதுவே சிறந்த தருணம் " என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரம்பம் முதலே சுதந்திரக் கட்சிக்கு தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்பு இருந்து வருகிறது. அனைத்து இன மக்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை கட்சிக்கு இருப்பதால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சி செயற்பாடுகளில் இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை அனுமதிக்க மாட்டேன் என்றும் தயாசிறி எம்.பி ஆணித்தரமாக கூறினார்.

கிராம மட்டத்திலுள்ளவர்கள் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருந்தாலும்கூட கட்சி தலைவர்களென்ற வகையில் நாம் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்கப் போவதில்லை. அது தொடர்பான எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சியை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு தனவந்தர்களின் முகாம்களில் கட்சியை கொண்டு சேர்ப்பதற்கு நாம் இணங்க மாட்டோமென்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

கட்சி ஆதரவாளர்களுக்கு உத்தரவிடும் அதிகாரியாகவன்றி உண்மையான அதிகாரியாக செயற்படவே விரும்புகின்றேன். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் நேர்மையாகவும் தவறின்றியும் முன்னெடுப்பேன்.அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு எனக்கு தேவை. கட்சியின் ஒழுக்கம் இன்றியமையாதது என்பதால் அதனை பாதுகாப்பதற்கு நான் முன்னுரிமை வழங்குவேன். இரண்டாவதாக கிராம மட்டத்தில் கட்சிக்கான ஆதரவை பலப்படுத்துவேன். மூன்றாவதாக அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அக்கறை செலுத்துவேன் என்றும் அவர் விளக்கமளித்தார்.

சிலர் என்னையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவையும் மோத வைக்கப் பார்க்கிறார்கள். எனக்கும் அவருக்குமிடையில் எவ்வித பகையுமில்லை. பொதுஜன பெரமுனவிலுள்ளவர்களை சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் நான் களமிறங்கவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...