எங்களைக் கேள்வி கேட்பதற்கு கேரள அரசுக்கு அதிகாரமில்லை | தினகரன்


எங்களைக் கேள்வி கேட்பதற்கு கேரள அரசுக்கு அதிகாரமில்லை

சபரிமலை தந்திரிகளின் குடும்பத்தினர் 'தாழமண் மடம் குடும்பத்தினர்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கேரள மாநிலம், செங்கனூரில் வசித்து வருகின்றனர். "சபரிமலை தந்திரியைக் கேள்வி கேட்க அரசுக்கோ தேவசம் போர்டுக்கோ அதிகாரமில்லை" என்று இவர்கள் தெரிவித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய முயன்ற பல்வேறு இளம் பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர். இந்தச் சூழலில் கடந்த வாரம் 40 வயதுகளில் இருந்த இரு பெண்கள் பொலிஸார் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்.

இதனால் கோயிலை சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறி தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கடந்த ஜனவரி 2-ம் திகதி சுத்த கலச பூஜை நடந்தது. இதற்காக பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர், கோயில் பூட்டப்பட்டது. இதற்கு கேரள அரசும் தேவச போர்ட்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கோயிலைப் பூட்டி, பூஜை நடத்தியது குறித்து தந்திரி விளக்கமளிக்க வேண்டும் என்று தேவசம் போர்ட் தெரிவித்தது.

இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், சபரிமலை கோயிலின் தந்திரியாக உள்ள தாழமண் மடக் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர்.

அதில், ''கி.பி.55 வரை தாழமண் குடும்பம் நிலக்கல்லில் இருந்தது. கி.மு.100இ-ல் சபரிமலை தந்திர உரிமை பரசுராம மகரிஷியால் அளிக்கப்பட்டது. தந்திரிக்கான உரிமைகள் அனைத்தும் பரசுராமர் வழங்கியவை. தேவசம் போர்ட் அளித்தவையல்ல.

ஐயப்பன் கோயிலின் பாரம்பரியங்கள் மற்றும் சடங்குகளைத் தீர்மானிக்கும் உரிமைகள் தந்திரிகளிடம் நிலையாக இருக்கின்றன. கோயில்களின் தெய்வத்தைப் பொறுத்து, கோயிலுக்குக் கோயில் இது மாறும்.

தந்திர அறிவியல் மற்றும் குருகுல கல்வியின் அடிப்படையில் சடங்குகளையும் பூஜைகளையும் செய்யும் திறனை தந்திரிகள் பெறுகின்றனர். தந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில், சடங்குகளைச் செய்ய நிபுணத்துவம் கட்டாயம் தேவை. அதனால்தான் கோயிலின் அனைத்து பூஜைகளிலும் தந்திரிகள் உடனிருக்கின்றனர்.

கோயிலின் பாரம்பரியத்தைப் பொறுத்து, தந்திரிகளின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளே உறுதி செய்திருக்கின்றன. இதனால் கேரள அரசுக்கோ தேவசம் போர்ட்டுக்கோ சபரிமலை தந்திரியைக் கேள்வி கேட்க அதிகாரமில்லை.

தந்திரிகள் அரசிடம் இருந்தோ, தேவசம் போர்ட்டிடம் இருந்தோ மாதச்சம்பளம் வாங்குவதில்லை. தட்சணையை மட்டுமே பெறுகின்றனர். தந்திரிகள் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்காகவும், மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளவுமே இதைத் தெரிவிக்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...