ரூ.100 கோடி வரி ஏய்ப்பு? வருமானவரித்துறை புகாரினால் ராகுல், சோனியாவுக்கு சிக்கல் | தினகரன்


ரூ.100 கோடி வரி ஏய்ப்பு? வருமானவரித்துறை புகாரினால் ராகுல், சோனியாவுக்கு சிக்கல்

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் முறையே ரூ.155 கோடி மற்றும் ரூ.154 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை பரபரப்பு குற்றச் சாட்டு தெரிவித்துள்ளது.

சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். அதில் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் வருமானத்தை மறு ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

2011, 2012-ம் ஆண்டுகளில் தங்களுக்கு ரூ.68 இலட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும் 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கண்டறியப்பட்டிப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது. அதன்படி ரூ.300 கோடி வரையிலான வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறு ஆய்வு செய்யும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சோனியாவும் ராகுல் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் கூறியதாவது: யங் இண்டியன் நிறுவனத்தில் ஒரே சொத்து அதன்மீதுள்ள 90 கோடி ரூபாய் கடன் மட்டுமே.

ஆனால் அதனை வருமான வரித்துறை 407 கோடி ரூபாய் என தவறாக கணக்கு காட்டியுள்ளது. ராகுல், சோனியா ஆகியோருக்கு தங்கள் சொத்துக்களை வருமான வரித்துறையினர் மறு ஆய்வு செய்யும் தகவல் சரியான காலத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றார். இதையடுத்து வருமான வரித்துறை மற்றும் சோனியா, ராகுல் தரப்பு ஆகிய இரு தரப்பினரையும் இன்னும் ஒருவார காலத்துக்குள் தங்கள் வாக்கு மூலங்களை எழுத்துப் பூர்வமாக சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு ஜனவரி 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...