வடக்கு மக்கள் மீதான ஜனாதிபதியின் கரிசனை | தினகரன்

வடக்கு மக்கள் மீதான ஜனாதிபதியின் கரிசனை

தண்ணீர் ஒவ்வொரு உயிரினத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானது. அந்த வகையில் மனிதனின் உயிர்வாழ்வுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் அவசியமானது.

காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் விளைவாக தண்ணீரின் தேவை அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. இது பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக சில காலப் பகுதியில் குறுகிய நேர காலத்தில் கனத்த மழை பெய்தபோதிலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் நீரின் பெரும்பகுதி கடலிலும், கங்கைகளிலும் தான் கலக்கின்றது. அந்நீரில் பெரும்பகுதி எவ்வித பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை.

ஆனால் தண்ணீரின் தேவை அதிகரித்துச் செல்வது 1980 முதல் அவதானிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பின்புலத்தில் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலைமை ஆரம்பமாகியது. குறிப்பாக முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 1961 ஆம் ஆண்டில் 30 வருட காலத்தில் நிறைவேற்றும் திட்டமாக ஆரம்பித்த மகாவலி அபிவிருத்தி திட்டத்தை 1978 இல் பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர். ஜயவர்தன ஆறு ஆண்டு காலத்தில் முழுமைப்படுத்துவதற்கான துரித திட்டமாக இதனை அறிவித்து முன்னெடுத்தார். இது நீர் மின்சாரத்திற்கு மேலதிகமாக 365,000 ஹெக்டேயர் விவசாய நிலத்துக்கு நீர்ப்பாசனம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.

இந்த மகாவலி திட்டத்தைப் போன்று வேறு பல நீர்ப்பாசனத் திட்டங்களும் 1980கள் முதல் இற்றைவரையும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் இக்காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களில் வடபகுதி மக்களின் தண்ணீர்த் தேவை குறித்து பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. ஏனெனில் நாட்டில் சுமார் 30 வருட காலம் நிலவிய யுத்தம் இதற்கு காரணமாக அமைந்தது.

யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகியுள்ளது. இவ்வாறான சூழலில் வடபகுதியில் குடிநீருக்கும் விவசாய நீருக்குமான தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. விவசாய நீருக்கான தேவையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு காரணமாக வடபகுதி விவசாயிகள் சில போகங்களை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக தேசிய விவசாய உற்பத்திக்கு வடமாகாணம் அளிக்கும் பங்களிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், வடமாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களின் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பவ்வேறு விதமான அசெளகரியங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக அப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வாரத்தில் ஒரு தடவையே வெகு தூரம் சென்று குளிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு அங்குள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிநீரையும் வீட்டுப்பாவனை நீரையும் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் வடபகுதியில் தண்ணீர் விற்பனை செய்பவர்களும் புதிதாக உருவாகியுள்ளனர். ஆனால், பொது சுகாதார பரிசோதகரோ நீர் வழங்கல் சபை உத்தியோகத்தர்களோ எவ்விதத்திலும் பரிசோதனைக்கு உட்படுத்தாத நீரைத்தான் இவர்கள் பரல்கள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் தண்ணீரின் தரம் மற்றும் மனித பாவனைக்கு ஏற்ற தன்மை என்பன தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான நீர் என்பவற்றின் தேவை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளார். அந்த வகையில் களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தை நேற்றுமுன்தினம் மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி “வட பகுதி மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதன் மூலமே தமது நோக்கம் நிறைவடையும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வடபகுதி மக்களின் தண்ணீர்த் தேவையின் முக்கியத்துவத்தை நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. உண்மையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். அப்பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் பாவனை நீரும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் எவ்வித குறைபாடுகளுமின்றி கிடைக்கப் பெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு குறைபாடுகளின்றி தேவையான தண்ணீர் வடபகுதி மக்களுக்கு கிடைக்கப் பெறும் போது அவர்கள் தேசிய விவசாய உற்பத்திக்கு அளிக்கும் பங்களிப்பு தற்போதையதை விடவும் மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட முடியும்.

வட பகுதி விவசாயத்துக்கு பொருத்தமான மிகவும் வளமான பிரதேசம். அங்கு வாழும் விவசாயிகளும் விவசாயம் தொடர்பில் பரந்த அனுபவத்தையும் அறிவையும் கொண்டவர்கள். அந்தப் பகுதி நிலத்தின் மூலமும் அப்பகுதி விவசாயிகளைக் கொண்டும் உச்ச பலனை பெற்றுக் கொள்வதற்கு அவர்களது தண்ணீர் தேவை நிறைவேற்றி வைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வடபகுதி மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் இந்த நோக்கம் நிறைவேற்றப்படும் போது வடபகுதியின் துரித அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அது அடித்தளமாக அமையும் என உறுபடக் கூறலாம்.


Add new comment

Or log in with...