Friday, April 19, 2024
Home » கலங்கரை விளக்காக அறிவொளி வீசும் காரைநகர் இந்துக் கல்லூரி

கலங்கரை விளக்காக அறிவொளி வீசும் காரைநகர் இந்துக் கல்லூரி

by gayan
December 14, 2023 6:00 am 0 comment

காரைநகர் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் 25ஆவது வருட வெள்ளி விழா ஒன்றுகூடல் எதிர்வரும் சனிக்கிழமை (16) மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்

அறுகு போல் வேரூன்றி ஆல் போல் தழைத்து, காரைநகரின் கலங்கரை விளக்காக அறிவொளி வீசிவரும் பழைமையும் பாரம்பரியமும் மிக்க காரைநகர் இந்துக் கல்லூரி அன்று முதல் இன்றுவரை கல்வி கற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக அளப்பரிய சேவை வழங்கி வருகின்றது.

இப்பாடசாலையின் பெருமைக்கு வலுசேர்க்கும் வகையில் பல மகான்கள் தமது உன்னதமான உதவியை இப்பாடசாலைக்கு வழங்கி வருகின்றனர்.

“கல்வி அறிவொழுக்கங்களினால் சிறப்புற்ற மேலோர்களையே உங்களுக்கு குருமாராக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்”.

“ஊர் தோறும் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்து உங்களுள்ளே கல்வி அறிவொழுக்கங்களில் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவற்றை நடத்துவியுங்கள். உங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி லௌகிக நூல்களையும் நீதிநூல்களையும் சைவசமய நூல்களையும் கற்பியுங்கள்” எனும் கருத்துகளினால் பெரிதும் கவரப்பெற்றவரே காரைநகர் மடந்தை செய்த தவம் வாய்த்ததென வந்த கர்ம வீரன் ஸ்ரீமான் சங்கரப்பிள்ளை அருணாசலம் ஆவார். ஸ்ரீமான் ச.அருணாசலம் தமக்கென வாழாது சைவத்துக்கும் தமிழுக்குமாய் வாழ்ந்தார்.

சைவ மாணவர்கள் கற்பதற்காக ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையை காரைதீவு மண்ணில் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் அருணாசலம் மகானின் மனதில் கருக்கொண்டது. தமது எண்ணத்தை மாப்பாணவூரி கந்தப்பர் இலட்சுமண பிள்ளைக்கும் சிதம்பரப்பிள்ளை கந்தப்பவுக்கும் அயலவர் கோவிந்தபிள்ளைக்கும் தெரிவித்தார். இவரின் கருத்தால் உற்சாகமடைந்த கோவிந்தபிள்ளை தனது சொந்த நிலத்தில் ஒருபகுதியை பாடசாலை அமைக்க வழங்கி உதவியதுடன், யாழ்ப்பாணம், நல்லூர் முத்திரை சந்தியைச் சேர்ந்த சயம்பு எனும் சைவப்பற்றும் ஆங்கிலப்புலமையும் நிறைந்த ஆசானையும் அவர் நாடினார்.

இப்பாடசாலையில் பெரியார் சயம்பு ஆசியராக பணியாற்றத் தொடங்கியதுடன், சைவசமய கலாசாரத்தை மேலோங்கச் செய்யும் திறன்மிகு மாணவர்கள் உருவாகுவதற்கும் அவர் வழிசெய்தார்.

ஆரம்பக்காலக் கட்டத்தில் காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலையாக தொடங்கிய இப்பாடசாலை காலப்போக்கில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆங்கில வித்தியாலயமாக பெயர்பெற்றது. இப்பாடசாலையில் அம்பலச்சட்டம்பியார் தமிழ்க் கல்வி போதித்தார்.

ஊர்மக்கள் மண்டபம், இரண்டு அறைகளை நிர்மாணித்து பாடசாலை வளர்ச்சிக்கு உதவியதுடன், இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று உயர் பதவிகளை வகித்து பாடசாலையின் பெருமையை மேலோங்க செய்தனர்.

125 ஆண்டுகள் கடந்து தளர்வின்றி தன்னிகரற்ற கல்விப் பணியாற்றி ஒளி வீசிக்கொண்டிருக்கின்ற இப்பாடசாலையின் பெருமைமிகு வளர்ச்சிப் பாதையில் இதுவரைகாலமும் 25 நல் அதிபர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.எஸ்.தேவதாசன் அதிபராகவிருந்து பெரும் பணிகள் ஆற்றினார். அவர் மகத்தான சேவையை பாடசாலைக்கு வழங்கினார். காரைநகர் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் எஸ்.ஆர்.எஸ்.தேவதாசன் பணியாற்றினார். தலைமை ஆசிரியராக சிவத்திரு ஈ.கே.சிவசுப்பிரமணியம் ஐயரின் (B.A) காலத்தில் பாடசாலையின் கல்வித்தரம் உயர்வடைந்ததால், 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 07.09.1912 இல் பாடசாலை வெள்ளிவிழா கண்டது. அதியுயர் அதிபர்தர பதவி பெற்று காரைநகரின் முதன்மை பேராசானாக அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா சேவையாற்றிய காலத்தில் 1950.09.19ஆம், 20ஆம், 21ஆம் திகதிகளில் வைரவிழா, 1963 இல் பவளவிழா, 1968 இல் முத்துவிழா ஆகியன நடைபெற்றன.

பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், ஏ.கனகசபை (B.A) அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் இப்பாடசாலை சிரேஷ்ட வித்தியாசாலையாகி காரைநகர் இந்துக் கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டது.

விஞ்ஞான ஆங்கிலப் புலமைமிக்க பட்டதாரி ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் சிறந்தமுறையில் முன்னெடுக்கப்பட்டன. H.S.C எனும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு, IAB பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. கல்வி மாத்திரமின்றி சமய விழாக்கள், விளையாட்டு உள்ளிட்ட ஏனைய துறைகளிலும் சிறப்புப் பெற்றது இப்பாடசாலை. 1971 இல் இவ்வித்தியாலயத்தின் கனிஷ்ட பிரிவாக சுப்பிரமணிய வித்தியாசாலை இணைக்கப்பட்டது. கணிதம், பௌதீகவியல், பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு கணித, விஞ்ஞானத்துறைகள் மிளிரச் செய்யப்பட்டன. இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு தெரிவாகி கல்லூரியின் பெயரை புகழ் பெறச் செய்தனர்.

1976 இல் காரைநகர் முத்தமிழ் மன்றம், பெரியார் முத்து சயம்புவுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்து திறப்புவிழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. 1978_-1980 காலப்பகுதியில் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு, சிறப்புமலரும் வெளியிடப்பட்டது.

1983 இல் இப்பாடசாலைக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1988_ -1991 இல் இப்பாடசாலை கொத்தணி தலைமை பாடசாலையாக மாற்றப்பட்டது.

பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் பாடசாலையில் புதிய வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வுகூடம், தங்கம்மா நடராஜாவால் வழங்கப்பட்ட நன்கொடையாக வழங்கப்பட்ட நூல் நிலையம், நடராஜா ஞாபார்த்த மண்டபம், அதனை அண்டிய நிலம், கணினி ஆய்வுகூடம் உள்ளிட்ட நவீன வசதிகளை பெற்று இப்பாடசாலை முன்னணி பாடசாலையாக திகழ்ந்து வருகின்றது.

இப்பாடசாலைக்கு மகளிர் இருவர் அதிபராகப் பணியாற்றியுள்ளனர். முதல் பெண் அதிபர் என்ற பெருமையை காரைநகர் களபூமியைச் சேர்ந்த தேவநாயகி பாலசிங்கம் பெறுவதுடன், இரண்டாவது பெண் அதிபராக வாசுகி தவபாலன் பெறுகின்றார்.

இதேவேளை யாழ். காரைநகர் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் 25ஆவது வருட வெள்ளி விழாவுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (16) மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த சொல்லின் செல்வம் பி.மணிகண்டன் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ எனும் தலைப்பில் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளதாக, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன், நிதி அமைச்சு அதிகாரி தி.விஸ்வரூபன், சைவமணி சண்முகரத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘உனக்கு நீயே உண்மையாய் இரு’ எனும் உயரிய நீதி வாசகத்துடன் இப்பாடசாலையின் உன்னதமான பணி என்றைக்கும் தொடர வாழ்த்துகிறோம்.

(உதவிக் கல்விப்பணிப்பாளராகப் பணியாற்றிய அமரர் திருமதி சிவபாக்கியம் நடராஜா

அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT