நடிகை பிரியங்கா விவாகரத்து | தினகரன்

நடிகை பிரியங்கா விவாகரத்து

அந்தரங்க படங்களை வெளியிட்டதால் தனது கணவரை விவாகரத்து செய்ததாக நடிகை பிரியங்கா தெரிவித்தார்.

தமிழில் ‘வெயில்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா. இந்தப் படத்தில் அவர் பாடிய உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே பாடல் பிரபலம். செங்காத்து பூமியிலே, தொ(ல்)லை பேசி, தீயோற்கு அஞ்சேல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாள பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். பிரியங்காவுக்கும் மலையாள இயக்குனர் லோரன்ஸுக்கும் காதல் மலர்ந்து, 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சென்னையில் குடியேறினார்கள். அதன்பிறகு பிரசவத்துக்காக கேரளா சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2015-ல் விவாகரத்து கோரி திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் பிரியங்கா மனுதாக்கல் செய்தார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தை கணவர் தவறாக பயன்படுத்தியதாக நெடுமங்காடு நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கும் தொடர்ந்தார். அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தற்போது பெற்றோர்களுடன் கேரளாவில் உள்ள சொந்த ஊரான வாமனா புரத்தில் வசித்து வருகிறார். மகன் முகுந்த் ராமையும் தன்னுடன் வைத்து வளர்க்கிறார்.

மீண்டும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கணவரை ஏன் விவாகரத்து செய்தேன் என்ற அதிர்ச்சி தகவலை இப்போது வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, “எனது அந்தரங்க புகைப்படங்களை லோரன்ஸ் சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார். நடிப்பு மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனால் லோரன்ஸ் நான் நடிக்கக் கூடாது என்றும் தடைவிதித்தார். இதனால்தான் விவாகரத்து செய்து பிரிந்தேன்” என்று கூறியிருக்கிறார். பிரியங்காவின் தகவல் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Add new comment

Or log in with...