பேட்டை நாளை ரிலீஸ்; சினிமாவில் மட்டும் முதல்வர் | தினகரன்


பேட்டை நாளை ரிலீஸ்; சினிமாவில் மட்டும் முதல்வர்

ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வராவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படம் நாளை 10 ஆம் திகதி வெளிவருகிறது.

இந்தப் படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருககாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வரும் விருப்பத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், முருகதாஸ் படத்தில் அரசியல் பேசப் போகிறாராம் ரஜினி. ஒரு சாதாரண ஆள் படிப்படியாக முன்னேறி மாநில முதல்வர் ஆவதுதான் கதை என்று கூறப்படுகிறது. அந்த முதல்வர் வேறு யாரும் அல்ல... ரஜினியேதான்.

"எந்தக் கட்சி நம்ம கட்சி" என்று ரஜினியிடம் கேட்டால் "கட்சி எல்லாம் இப்போ நமக்கெதற்கு, காலத்தின் கையில் அது இருக்கு" என்று கூறி வந்தார்.

கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அறிவித்து ஓராண்டு காலம் ஆகியுள்ள நிலையில் முதலில் படத்தில் அரசியல் பேசி முதல்வர் நாற்காலியை பிடிக்கப் போகிறாராம்.

ரஜினி முதல்வராகும் படத்திற்கு 'நாற்காலி' என்று பெயர் வைக்கலாமா என யோசனையில் உள்ளார் முருகதாஸ். படத்திற்கு வேறு பெயர்களையும் தேடிக் கொண்டிருக்கிறார்.

படத்தில் ஒத்திகை பார்த்து விட்டு நிஜத்தில் முழுவீச்சில் அரசியல் செய்வார் ரஜினி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் 'மக்கள் நீதி மய்யம்' போட்டியிடுகிறது. ரஜினிக்கு இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. அதனால் கட்சி தொடங்கும் பணியை ஒத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகி விட்டது. இந்நிலையில் ஒத்தி வைப்பா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் படத்தில் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என்று 'ஒன் இந்தியா' இணையத் தளத்தின் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்காக தரமான அரசியல் கதையை தயார் செய்து வைத்துள்ளார் முருகதாஸ். படத்தில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஆகிறாரார்.

ரஜினி கட்சி தொடங்கும் முன்பே படத்தில் முதல்வராவது குறித்து 'ஒன் இந்தியா' இணையத் தளத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ரஜினி முதல்வராவது எல்லாம் படத்தில் மட்டுமே நடக்கும் என்று 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ரஜினி முதல்வர் ஆவது சிறப்பு என்று 19 சதவீதம் பேரும், முதலில் அவர் கட்சி தொடங்கட்டும் பார்க்கலாம் என்று 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரஜினி என்றாலே வேகம் என்று அர்த்தம். எதையும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வேகமாக செய்து முடிப்பார். அப்படிப்பட்ட மனிதர் கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான் பலருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது.

ரஜினி முதல்வர் ஆனால் தமிழகத்தையே அமெரிக்கா போன்று மாற்றி விடுவார் என்று நம்புகிறார்கள் அவரின் ரசிகர்கள். ஆனால் அவர் அரசியலுக்கு நிஜமாகவே வருவாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழத் தொடங்கி விட்டது. அவர் தொடர்ந்து புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதும் இந்த சந்தேகத்திற்குக் காரணம்.


Add new comment

Or log in with...