மலினமாக மதிப்பிடப்படுகின்ற தோட்டத் தொழிலாளர் உழைப்பு | தினகரன்

மலினமாக மதிப்பிடப்படுகின்ற தோட்டத் தொழிலாளர் உழைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும்படி கோரி மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், வேலைநிறுத்தங்களும் தோட்டப்புற பிரதேசங்களில் அடிக்கடி இடம்பெறுகின்றன. அவை பல மாதங்களாக எவ்வித தீர்வுமின்றி நீடிக்கின்றன.

அரசியல் ரீதியாக ஒருவருக்கொருவர் எதிராக செயல்படும் தோட்டத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்தில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. அதற்குக் காரணம் சம்பள அதிகரிப்பு அவசியம் என்பதை அனைவரும் எவ்வித விவாதமுமின்றி ஏற்றுக் கொள்ளவதனாலாகும். தோட்டத் தொழிலாளரின் சங்கங்களின் பிரதிநிதிகளும் மற்றும் 22 முகாமைத்துவ கம்பனிகளின் தலைவர்களும் முடிவுகளை எடுப்பதற்காக ஒப்பந்தமொன்றில் கைசாத்திட்டுள்ளார்கள்.

அந்த ஒப்பந்தத்துக்கு அமைய இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்கின்றன. கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர் சம்பளம் இரண்டு வருடங்களுக்கொரு முறை அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அதிகரிக்கப்படாமைக்குக் காரணம் உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி போன்ற விடயங்களை முன்வைத்து தோட்டதுரைமார் சங்கம் குறிப்பிட்ட ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளை செயல்படுத்தாமல் தட்டிக் கழித்ததாகும்.

அரசியல் முடிச்சு:

இந்த ஒப்பந்தம் சரியாக செயற்படாமைக்குக் காரணம் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதும், தோட்டப்புறங்களில் அரசியல் கட்சிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டியுமே ஆகும். அரசியல் கட்சிகள் தோட்ட மக்களைப் பாவிப்பது தங்களின் பலத்தை காண்பிப்பதற்காகவே ஆகும். இரண்டு வருடங்களுக்கொரு முறை சம்பளத்தை உயர்த்தும் ஒப்பந்தம் 1999ம் ஆண்டிலேயே கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி 2015 ஏப்ரல் மாதம் சம்பளத்தை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி அதனை வழங்கவில்லை. இறுதியாக சம்பள உயர்வு 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதியே வழங்கப்பட்டது. அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 2018ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச உத்தியோகத்தரின் குறைந்தபட்ச சம்பளமான 32,040 ரூபா வழங்கப்பட வேண்டும் என நாம் பல வருடங்களாக கோரி வருகின்றோம். தோட்டங்களில் நாட்கூலி முறையில் வேதனம் வழங்கப்படுவதால் இந்தப் பணம் வேலை செய்யும் 25 நாட்களால் பிரித்து நாளொன்றுக்கு 1281 ரூபா சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக நாம் போராட்டம் செய்தோம். அதற்கு தோட்டத்துறையை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இணங்கவில்லை.

ஆனால் இன்று நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திய வேளையில், தோட்டத் துரைமார் 940 ரூபாவுக்கு அதிகமாக வழங்க முடியாதெனக் கூறி வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த நேரத்தில் அரசாங்கத்துடன் இணைந்திருந்த தொண்டமான் ஆயிரம் ரூபா பெற்றுத் தருவதாகக் கூறி வேலைநிறுத்தத்தை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தார். டிசம்பர் 03ம் திகதி மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தொண்டமான் மீண்டும் தோட்டங்களில் சம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்தார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டமை:

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் அநேகமாக அரசியல் தோற்றம் பெறுவது அவற்றிற்கு தலைமை வகிப்பவர்களின் நோக்கம் காரணமாகும். தற்போது தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 500 ரூபாவாகும். சேமலாபநிதி, நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் பிரசவ மற்றும் பணிக்கொடை என்பவற்றுக்கான பணமும் இதிலிருந்தே செலுத்தப்படுகின்றது. மாதத்தில் 70 வீத நாட்கள் வேலை செய்த பின்னர் வருகைக்கான கொடுப்பனவாக 60 ரூபா சேர்க்கப்படும். விலைகளுக்கான கொடுப்பனவாக 30 ரூபாவும் வேலை பூர்த்தி இலக்கை செய்தால் 140 ரூபாவும் சேர்ந்தால்தான் தொழிலாளியின் தினக்கூலி 730 ருபாவாகின்றது. குறிப்பிட்ட இலக்கு இலகுவாக எட்டப்படக் கூடியதல்ல. அந்த இலக்கை கடந்து மேலதிகமாக கொய்யப்படும் ஒரு கிலோ தேயிலைக்கு 25 ரூபா வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் அந்த இலக்கை 35 வீதமானோருக்கும் குறைவானவர்களே அடைகின்றார்கள்.

தற்போது சுமார் இரண்டு இலட்சம் தொழிலாளர்களே வேலையில் ஈடுபடுகின்றார்கள். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக இருந்தவர்கள் குறைவடைந்ததற்குக் காரணம் குறைந்த சம்பளமாகும். இளைஞர்கள் தேயிலைத் தோட்டத்தை விட்டு வெளியேறுகின்றார்கள். மேலும் தோட்ட நிர்வாகிகள் தோட்டத்தை நன்றாக பராமரிக்காததால் 80 வீதமான தோட்டங்கள் காடுகளாக மாறியுள்ளன . தேயிலைத் தோட்டங்களின் நிலைமை மோசமாகவுள்ளது. அரசாங்கம் தோட்டங்களை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியதால் அவற்றை சரியான முறையில் பராமரிக்காமை காரணமாக தேயிலை உற்பத்தி சரிவை நோக்கிச் செல்கின்றது.

குறைந்த சம்பளத்தின் பிரதிபலன்:

நாளாந்த சம்பளம் பெறும் தோட்ட சமூகத்தினர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்தளவே வாங்குகின்றார்கள். ஒரு கிலோ சீனியின் விலை 105 ரூபா. அதனை தோட்டங்களிலுள்ள சிறிய கடைகளில் 100 கிராம் என வாங்கும் போது ஒரு கிலோ சீனியின் விலை 150 ரூபாவாகின்றது. அதுபோலவே சில்லறையாக வாங்கும் போது அதிகளவு பணம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. தற்போது தோட்டங்களில் பற்றாக்குறை காரணமாக மந்த போசணையும் அதிகரிக்கின்றது. குறைந்த நிறையுடைய குழந்தைகள் பிறப்பது, சிசு மரணம், கர்ப்பிணித் தாய் மரணம், தற்கொலை என்பனவும் அதிகரிக்கின்றன. இவற்றிற்கெல்லாம் அவர்களின் பொருளாதாரமே காரணமாக அமைகின்றது. கல்வியிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை தோன்றுகின்றது.

க.பொ.த சாதாரண தரம் வரை 53 வீதமானோரும், க.பொ.த உயர்தரம் வரை 12.5 வீதமானகோரும் 2 விதமானோர் மாத்திரமே பல்கலைக்கழகக் கல்வியை மேற்கொள்கின்றார்கள். இதன் பின்னணியில் உள்ள பிரதான பிரச்சினை வாழ்வதற்கு பொதுமான சம்பளம் கிடைக்காமையாகும்.

பிரதான தொழிற்சங்கங்களில் தலைமை தாங்க கட்சிகளின் அடிமைகள் போன்ற நிலைமைக்கு தோட்டத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போது அதிலிருந்து மீள நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இலங்கைத் தேயிலைக்கு சர்வதேசத்தில் நல்ல பெயருண்டு. இன்று அந்த நிலைமை எம்மை விட்டு மெல்ல மெல்ல நழுவிப் போவதாகத் தோன்றுகின்றது. அதற்குக் காரணம் அரச கொள்கைகளிலுள்ள பலவீனமேயாகும்.

தோட்ட நிர்வாகிகள் தோட்டத் தொழிலாளர்களை சுரண்டியே வாழ்கின்றார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் 730 ரூபாவுக்கும் குறைவான சம்பளத்துடன் வாழ முடியுமா என எண்ணிப் பார்க்க வேண்டும். பிரச்சினை தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்களின் கவனம் அவர்கள் பக்கம் இன்மையால் தோட்டத் தொழிலாளர்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்களை செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அசேல குருளுவன்ச
(தினமின)


Add new comment

Or log in with...