Saturday, April 20, 2024
Home » புதைபடிவ எரிபொருளில் இருந்து மாற உடன்பாடு

புதைபடிவ எரிபொருளில் இருந்து மாற உடன்பாடு

by gayan
December 14, 2023 9:28 am 0 comment

டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் COP28 காலநிலை மாநாட்டில் காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்பை தவிர்ப்பதற்கு உலக நாடுகள் புதைபடிவ எரிபொருளில் இருந்து மாறுவதற்கு முதல் முறையாக உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

சுமார் 200 நாடுகளால் நேற்று (13) ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த உடன்பாட்டை COP28 தலைவர் சுல்தான் அல் ஜாபர் வரவேற்றுள்ளார். தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைக்குள், உலக வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மட்டுப்படுத்தும் வலுவான திட்டமாக இது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எமது இறுதி உடன்பாட்டில் முதல் முறையாக புதைபடிவ எரிபொருள் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளோம்” என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் அட்னொக் எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அல் ஜாபர் தெரிவித்தார். இது இன்னும் மேம்பட்ட, தூய்மையான உலகை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார். புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் முக்கிய படியாக இது உள்ளது என்று இந்த மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலக வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனித குலம், உலக வெப்ப உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்க, விரைந்த, நீடித்த, அர்த்தமுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதைத் தீர்மான வாசகங்கள் அங்கீகரித்தன. எனினும் 100க்கும் அதிகமான நாடுகள் கோரியது போன்று புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை நிறுத்தும் அளவுக்கு இந்த உடன்பாடு இதுவரை செல்லவில்லை. மாறாக, நியாயமான, ஒழுங்கான மற்றும் சமமான முறையில் புதைபடிவ எரிபொருளில் இருந்து மாறும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த மாற்றமானது 2050 ஆம் ஆண்டில் பசுமையில்ல வாயு உமிழ்வை பூஜ்ய அளவுக்கு கொண்டுவருவதற்கும் காலநிலை விஞ்ஞானிகளின் பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு வகை செய்வதாக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT