Friday, March 29, 2024
Home » நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியம்

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியம்

by gayan
December 14, 2023 6:00 am 0 comment

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். சிங்களம், தமிழ் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களையும் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய இனங்களையும் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இன, மத, மொழி ரீதியில் பல்வகைமையைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக விளங்குகிறது. இது உலகிற்கான தனித்துவம் மிக்க அடையாளங்களில் ஒன்றாகும். இவ்வாறான பல்வகைமையை ஒருங்கே பெற்றுக்கொண்டுள்ள நாடுகள் உலகில் மிகவும் குறைவாகும். இதன் சிறப்பும் முக்கியத்துவமும் புரிந்து கொள்ளப்படாததன் விளைவாகவே இன ரீதியிலான முரண்பாட்டுக்கு இந்நாடு உள்ளானது.

இந்நாட்டு மக்களைப் பலவீனப்படுத்தவும் அவர்களைப் பிரித்தாளவும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்நாட்டின் இன, மத, மொழி ரீதியிலான பல்வகைமையை கையிலெடுக்க முயற்சி செய்தது. ஆனால் அம்முயற்சி அவர்களது ஏகாதிபத்தியம் முற்றுப்பெற்ற பின்னர்தான் பயனளிக்கத் தொடங்கியது.

அதாவது இந்நாட்டின் சுதந்திரத்தின் பின்வந்த ஆட்சியாளர்களில் சிலர், சுதந்திரத்திற்கு முன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் விதைத்த பிரித்தாளும் கொள்கையை தம் கையில் எடுத்தனர். அதாவது சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். ஆனால் சுதந்திரத்தின் பின்னர் இன, மொழி, மத ரீதியிலான பார்வையும் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற நோக்கும் மேலோங்க அவர்கள் வித்தூன்றினர்.

இது பெரும்பான்மையினரின் வேலைத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையினர் மத்தியில் சந்தேகமும், ஐயமும் தோற்றம் பெற வழிவகுத்தது. அவை ஜனநாயக ரீதியிலான அகிம்சைப் போராட்டங்களுக்கும் வழிவகுத்தன. ஆனால் அப்போராட்டங்களின் நிமித்தம் அளிக்கப்பட்ட பிரதிபலிப்புக்கள் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற சந்தேகங்களை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தன. சில ஆட்சியாளர்கள் முன்னெடுத்த சில வேலைத்திட்டங்களும் இச்சந்தேகங்களை வளர்க்கக் கூடியனவாக இருந்தன.

இந்தச் சந்தேகங்கள் ஆயுத ரீதியிலான போராட்டத்திற்கும் துணைபோயின. அதனால் சுமார் 30 வருடங்கள் ஆயுத மோதல் நீடித்தது. அழிவும் இழப்பும் சேதங்களும்தான் அதன் விளைவாகின. அதன் காரணத்தினால் நாடு பொருளாதார ரீதியில் பல வருடங்கள் பின்தள்ளப்பட்டது. விலைமதிக்க முடியாத மனித வளமும் சொத்துக்களும் இழக்கப்பட்டன. இந்த யுத்தத்தினால் அழிவுகளையும் இழப்புக்களையும் சேதங்களையும் தவிர நாடோ மக்களோ பெற்றுக்கொண்ட பிரதிபலன்கள் எதுவுமில்லை.

இந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டும் 14 வருடங்களாகியும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் இன்னும் முழுமையாக நீங்கியதாக இல்லை. இவ்வாறான ஐயங்களை வைத்துக்கொண்டு நாடொன்றை அபிவிருத்திப் பாதையில் இட்டு செல்ல முடியாது. பல்லின மக்கள் வாழும் நாடொன்றை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்வதற்கு இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் அவ்வாறு செயற்படுவதன் விளைவாகவே இலங்கையை விடவும் பல மடங்கு அவை முன்னேற்றமடைந்திருக்கின்றன. ஆனால் இலங்கை சுதந்திரமடையும் போது இந்த இரு நாடுகளும் இலங்கையை விடவும் பெரிதும் பின்னடைந்தே காணப்பட்டன.

அந்த வகையில் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதன் அவசியம் தற்போது பரவலாக உணரப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் உலக தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுபபினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பிற்கு தலைமை தாங்கி உரையாற்றிய சாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்ன, ‘இலங்கையில் நீடித்து வருகின்ற இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அனைத்து இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக உலகத் தமிழர் பேரவையினர் பௌத்த தேரர்களுடன் இணைந்து ஒரு புனித பயணத்தை முன்னெடுத்துள்ளார்கள். அப்பயணம் வெற்றி பெறுவதற்கு இதுவே பொருத்தமான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த தேசத்திற்கு நல்லிணக்கமும் ஒற்றுமையும் மிகவும் அவசியமானது. இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பாலான ஐக்கியத்தின் ஊடாக இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்டு செயற்படும் போது நாடு வளம் பெறும். அப்போது தான் பொருளாதார மறுமலர்ச்சியை அடைந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT