வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு மீதான அக்கறை | தினகரன்


வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு மீதான அக்கறை

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவனும், கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ. எம்.ஹிஸ்புல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனங்களை இப்புத்தாண்டின் தொடக்கத்தில் மேற்கொண்டிருக்கிறார்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தினூடாக அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபை முறைமை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இணைந்த மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இதற்கேற்ப 1988ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையும் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபையாக நடைமுறையில் இருந்தது.

இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், 2007ஆம் ஆண்டு முதல் வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இயங்கி வருகின்றன.

மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் மூன்று தசாப்த காலம் கடந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்திருந்த போதும், இரு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னரும் இந்த மாகாணங்களுக்கு தமிழ் பேசும் எவரும் கடந்த காலத்தில் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.

இந்த மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலாவதுஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் நளின் செனவிரத்னவை நியமித்தார். அதன் பின்னர் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா உட்பட சிவில் உயரதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இம்மாகாணங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

தமிழ் பேசும் ஆளுநர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த போதிலும் அக்கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.குறிப்பாக இம்மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மொழியையும் உணர்வுகளையும் அறிந்து தெரிந்து கொள்ளக் கூடிய தமிழ் பேசும் ஆளுநர்களை நியமிக்குமாறு விடுக்கப்பட்டு வந்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வந்தது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு,கிழக்கு மக்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவனையும், கிழக்கு மாகாண ஆளுநராக எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவையும் நியமித்திருக்கிறார்.

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஜேம்ஸ் மெடிஷன் புலமைப் பரிசிலை ஆசியாவிலேயே இரண்டு தடவைகள் பெற்று 2005இல் கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு, 2008 இல் கலாநிதி கற்கையையும் நிறைவு செய்துள்ளார். 2008 மற்றும் 2011ம் ஆண்டுகளில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப் பரிசிலைப் பெற்றுள்ள இவர், தற்போது சென்போல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுவதோடு ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகக் கடமையாற்றுகிறார்.

இதேநேரம் ஹிஸ்புல்லா பாராளுமன்ற அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து சுமார் மூன்று தசாப்தகால நேரடி அனுபவத்தைப் பெற்றவராவார்.

அதேநேரம் இந்நியமனங்கள் ஊடாக வடக்கு,கிழக்கு மக்களின் மத்தியில் புதிய நம்பிக்கையும், எதிர்பார்ப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அப்பிரதேசங்களைத் துரிதமாக கட்டியெழுப்புவற்கு அறிவும், ஆளுமையும், அனுபவங்களையும் கொண்டவர்களை ஜனாதிபதி ஆளுநராக நியமித்திருக்கிறார். இந்த நியமனங்களின் ஊடாக சுமார் 30 வருட கால யுத்தம் காரணமாக ஏற்கனவே பின்னடைந்துள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஏனைய மாகாணங்களுக்குச் சமமாகத் துரிதமாக கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இம்மாகாணங்களில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் துரிதமாகத் தீர்த்து வைப்பதற்கும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

உண்மையில் யுத்தம் காரணமாகப் பின்னடைந்துள்ள இந்த இரு மாகாணங்களும் ஏனைய மாகாணங்களுக்கு சமமான அளவில் கட்டியெழுப்பப்பட வேண்டும். இங்கு வாழும் மக்களின் எதிர்பார்ப்புக்களும், தேவைகளும் நிறைவேற்றி வைக்கப்பட வேண்டும். இவ்விடயங்களில் இரு மாகாண ஆளுநர்கள் முன்பாகவும் பாரிய பொறுப்புகள் உள்ளன. அதனால் இந்த ஆளுநர்களுக்கு மாகாண, பிரதேச மட்ட அரசியல்வாதிகளும், சிவில் உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச மக்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்குவது மிகவும் அவசியமானது. அது இம்மாகாணங்களை துரித அபிவிருத்தியில் இட்டுச் செல்லவும், இங்கு வாழும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்கும் பக்கத்துணையாக அமையும்.


Add new comment

Or log in with...