இலங்கை அணியை 'வைட் வோஷ்' செய்தது நியூசிலாந்து | தினகரன்

இலங்கை அணியை 'வைட் வோஷ்' செய்தது நியூசிலாந்து

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 115 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 3-0 எனும் அடிப்படையில் கைப்பற்றியது.

ஏற்கனவே நடைபெற்ற இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில் ஆறுதல் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி போட்டியை எதிர்கொண்டது. சக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் குறைவான ஓட்டங்களுக்கு இலங்கை வீழ்த்தியது.

எனினும் மீண்டும் நியூசிலாந்து சார்பாக அபாரம் காட்டிய ரோஸ் டெய்லர் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் உடன் இணைந்து சிறப்பான இணைப்பாட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 55ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் புதிதாக களம் புகுந்த ஹென்றி நிகோல்ஸுடன் இணைந்த ரோஸ் டெய்லர் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தார். மறுபுறம் ஹென்றி நிக்கோல்ஸ் அதிரடியாக ஆட நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது. நியூசிலாந்து அணியின் இறுதி விக்கெட்டாக ரோஸ் டெய்லர் 137 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதி வரை களத்திலிருந்த ஹென்றி நிக்கோல்ஸ் 80 பந்துகளில் 124 ஓட்டங்களைப் பெற, நியூசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 364 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதிலும் 10 ஓவர்கள் பந்து வீசி 93ஓட்டங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

365 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடிகளாக களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணி 66 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை முதலாவது விக்கெட்டாக தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டாக நிரோஷன் திக்வெல்ல 47ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் தசுன் சானக ஆகியோர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர் கொண்டதுடன் நிதானமாக ஆடிய குசல் பெரேரா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் நிலை மேலும் கவலைக்கிடமாகியது.

எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த தனுஷ்க குணதிலக மற்றும் திசர பெரேரா ஜோடி நம்பிக்கை தரும் விதத்தில் ஆடியது. இருவரும் இணைப்பாட்டமாக 99ஓட்டங்களை பகிர்ந்திருந்த வேளை மீண்டும் சிறப்பாக ஆடிய திசர பெரேரா 80ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. இறுதியாக இலங்கை அணி 41.4 ஓவர்களில் 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத்தழுவியது.

பந்து வீச்சில் லோகி பேர்குசன் 4 விக்கெட்டுகளையும் இஷ் ஷோதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த ஒருநாள் தொடரைப் பொறுத்த வரை இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஓரளவு எழுச்சியை காண்பித்தாலும் மத்திய வரிசை துடுப்பாட்ட பலவீனம் மற்றும் மிக மோசமான பந்து வீச்சு என்பனவே இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.

நியூசிலாந்துக்கான இலங்கை அணியின் சுற்றுப்பயணத்தின் இறுதி போட்டியான ஒரே ஒரு ரி20 போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து 364/4 (50)
ரோஸ் டெய்லர் 137 (131)
ஹென்றி நிக்கோல்ஸ் 124 (80)
கேன் வில்லியம்சன் 55 (65)

லசித் மாலிங்க 3/93 (10)
லக்‌ஷான் சந்தகன் 1/54 (10)

இலங்கை 249/10 (41.4)
திசர பெரேரா 80 (63)
நிரோஷன் திக்வெல்ல 46 (37)
தனஞ்சன டி சில்வா 36 (29)

லொக்கி பெர்குசன் 4/40 (8)
இஷ் சோதி 3/40 (8.4)

ஆட்ட நாயகன்: ரோஸ் டெய்லர்


Add new comment

Or log in with...