இலங்கையின் வரலாற்றில் மாற்ற முடியாத பாரம்பரியம் | தினகரன்

இலங்கையின் வரலாற்றில் மாற்ற முடியாத பாரம்பரியம்

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னரான அரசியல் வரலாற்றை எடுத்து நோக்குவோமானால், தமிழ் மக்களிடமிருந்து அரசியல் உரிமைக்கான கோரிக்கை தோற்றம் பெற்று ஏழு தசாப்த காலமாகி விட்டதென்று தாராளமாகக் கூற முடியும்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1948 ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சுதந்திரத்தை வழங்கிய கையுடனேயே இந்நாட்டில் இனப்பிரச்சினையும் தோற்றம் பெற்று விட்டதென்பதே அரசியல் ஆய்வாளர்களின் பதிவாக உள்ளது.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவருமே அம்மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் வென்றெடுப்பதற்காக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் பலவிதமான அணுகுமுறைகளில் போராடியிருக்கின்றனர்.

இந்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வந்த தலைவர்கள் ஒவ்வொருவருடனும் தமிழ்த் தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் அரசியல் ரீதியான போராட்டங்கள் சற்றுத் தணிந்து ஆயுதப் போராட்டம் உருவெடுத்த பின்னரும் கூட இவ்வாறான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபடியே வந்துள்ளன.

ஆனால் எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் இதுவரை உரிய பலனைத் தந்தது கிடையாது. தமிழ் மக்கள் முற்றுமுழுதாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை! இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தத்தின் கீழ் கிடைத்த வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையைக் கூட தமிழினம் அனுபவிக்க முடியாமல் போய் விட்டமை இவ்விடயத்தில் கிடைத்த பெரும் ஏமாற்றம் எனலாம்.

கடந்த காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போனமைக்கு தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள் பலவிதமான காரணங்களைக் கூறுகின்றனர்.

‘தமிழர் தலைவர்களது ஒரே குறிக்கோள் நாட்டின் பிரிவினையாகும்’ என்பது சிங்களத் தலைவர்களின் அபத்தம் நிறைந்த பொதுவான குற்றச்சாட்டு ஆகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான நீண்ட கால ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள மாட்டாதவர்களாக சாதாரண பாமர மக்கள் பேசுவதைப் போலவே சிங்கள மக்கள் தரப்பிலுள்ள புத்திஜீவிகளும் இவ்விதமான அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றார்கள்.

முப்பது வருட காலம் ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற போது மாத்திரமன்றி, யுத்தம் முற்றாக ஓய்ந்து போன பின்னரும் கூட பிரிவினை என்ற அபாண்டமான வாதத்தை சிங்கள அரசியல் தலைவர்களும், அச்சமூகத்திலுள்ள புத்திஜீவிகளும் இன்னுமே கைவிடுவதாக இல்லை.

‘வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையானது தனிநாடு அல்ல’ என்று இன்றைய தமிழர் பிரதிநிதிகள் உறுதிபடத் தெரிவித்த பின்னரும் கூட பிரிவினைத் துரும்பைக் கைவிடுவதற்கு சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பலர் இன்னுமே தயாராக இல்லை.

தமிழினத்தைப் பொறுத்தவரை தங்களது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்ற சமஷ்டி கனவையும் அவர்கள் மறந்து நீண்ட காலமாகி விட்டது.

தங்களது தாயக மண்ணில் சிங்கள மக்களுக்கு நிகரான உரிமைகள், மரியாதைகளுடன் வாழக் கூடிய நியாயமான அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் இன்றுவரை கோரி வருகின்றனர். ஆனாலும் நியாயமான அரசியல் தீர்வொன்று எட்டப்படுவதற்கான அறிகுறிகளையே காண முடியாதிருக்கின்றது.

அன்றைய காலத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் அத்தனையுமே தோல்வியில் முடிவடைந்து விட்டன. அதேசமயம் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருட காலம் கடந்து விட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுவார்த்தை எதுவுமே நடைபெறவில்லை.

ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதால், இலங்கையின் இனப்பிரச்சினையும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதென்பதே அன்றைய ஆட்சியாளர்களின் கருத்தாக இருந்தது.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பத்து வருட ஆட்சிக் காலம் 2015 ஜனவரியில் முடிவுக்கு வந்ததையடுத்து, இனப்பிச்சினைத் தீர்வுக்கான முயற்சிகள் மீண்டும் துளிர்விடத் தொடங்கின. மைத்திரி – ரணில் கூட்டணிக்கு தமிழ் மக்கள் தங்களது ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்கியதற்குப் பதிலுபகாரமாக இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியை தூசுதட்டி மீண்டும் புரட்ட வேண்டியதொரு அவசரம் நல்லாட்சி அரசுக்கு ஏற்பட்டிருந்தது.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைக்கு குறைந்தபட்சத் தீர்வையேனும் தரக் கூடிய அரசியல் யாப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகள் நடந்தேறின. பாராளுமன்றத்தில் எதிரணியின் பலத்த எதிர்ப்புகள் இருந்த போதிலும் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகள் தடைகளைத் தாண்டி முன்னேறிச் சென்றன.

எனினும் நல்லாட்சி அரசின் மூன்றரை வருடப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் எதிர்நோக்கிய பலத்த நெருக்கடிகள் காரணமாக புதிய யாப்பை ஏற்படுத்தும் முயற்சியும் முடங்கிப் போனது. உள்நாட்டு அரசியல் நெருக்கடி மிகத் தீவிரமடைந்திருந்த காலப் பகுதியில் உத்தேச அரசியல் யாப்பைப் பற்றி எவருமே பேசவில்லை.

அரசியல் நெருக்கடி இப்போது ஓரளவு முடிவுக்கு வந்திருக்கின்றது. எனவே உத்தேச யாப்பு குறித்த பேச்சுகள் மீண்டும் தோன்றியுள்ளன. உத்தேச அரசியலமைப்புக்கான சட்டமூலம் விரைவில் அரசியலமைப்பு சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் மறுபுறத்தில் எதிரணியில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே உத்தேச அரசியல் யாப்பு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை இது புதுமையல்ல.

இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆளும் தரப்பு முன்னெடுக்கின்ற வேளைகளில் எல்லாம், எதிர்த்தரப்பு அதற்கு முட்டுக்கட்டைகள் போடுவது எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் மாற்றவே முடியாத சம்பிரதாயமாகிப் போய் விட்டது. இனப்பிரச்சினைக்கான தீர்வு எத்தகையோ தசாப்தங்களாகியும் இன்னுமே கைகூடாமல் போனதற்கான காரணமே இத்தகைய அபத்தமான அரசியல் கலாசாரம்தான்!

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் அரசியல்வாதிகள் பலருக்கு இதயசுத்தியான விருப்பம் கிடையாதென்பது உண்மை. இனப்பிரச்சினை விவகாரமே அவர்களது அரசியலுக்கான துரும்பு. இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டு விட்டால், அவர்களது அரசியலுக்கான துரும்பே இல்லாது போய் விடலாம்!


Add new comment

Or log in with...