சுதந்திரக் கட்சி மீதான நம்பிக்கையை குழப்புவதே சுமந்திரனின் நோக்கம் | தினகரன்

சுதந்திரக் கட்சி மீதான நம்பிக்கையை குழப்புவதே சுமந்திரனின் நோக்கம்

பெப்ரவரிக்கு முன்னர் புதிய யாப்பு வராது

சுதந்திரக்கட்சி குறித்து வடக்கு மக்களுக்கிருக்கும் நம்பிக்கையை குழப்புவதற்காகவே பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் ஐ.தே.கவினதும் ஜே.வி.பியினதும் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர இருப்பதாக சுமந்திரன் எம்.பி அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அணித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும் வடக்கில் பிரபலமான ஒரே தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே. செயலணியொன்றை அமைத்து வடக்கு மக்கள் முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், சுமந்திரன் என்ன தான் கூறினாலும் வடக்கு கிழக்கு மக்களுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் பிணைப்பை பிரிக்க எவராலும் முடியாது என்றும் தெரிவித்தார்.

முழு நாட்டு மக்களுக்கும் உகந்த புதிய அரசியலமைப்பொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எமது கட்சி தயாராக இருக்கிறது. அரசியலமைப்பு தொடர்பில் சு.க சாதகமான நிலைப்பாட்டிலே இருக்கிறது. சில குழுக்களினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்ற இடமளிக்க முடியாது. நாட்டை துண்டாடுவதற்கு ஜனாதிபதியோ சு.கவோ இடமளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய யாப்பிற்கான பின்புலன் இன்னும் உருவாகாத நிலையில் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வர முடியாது. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த திகதியில் நாட்டை பிளவுபடுத்தும் செய்தியை வழங்கவே சுமந்திரன் முயல்கிறார். ஐ.தே.கவும் ஜே.வி.பியும் ஒத்துழைப்பு வழங்குவதால் மாத்திரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது என்பது சிறுபிள்ளைக்கும் புரியும். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் உண்மையாள நோக்கமிருந்தால் ஜே.வி.பி, ஐ.தே.க ,சுதந்திரக் கட்சி என சகலரதும் ஒத்துழைப்புடன் அதனைக் கொண்டுவருவதாக சுமந்திரன் கூறியிருக்க வேண்டும். ஆனால், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு சுமந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். (பா)

 

 


Add new comment

Or log in with...