குற்றவாளிகள் மக்களல்லர்! | தினகரன்

குற்றவாளிகள் மக்களல்லர்!

ஓரிரு நாட்களுக்குள் மிகக் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்பட்டதனாலும், குளங்கள் வான் வாய்ந்ததாலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உண்டான மோசமான வெள்ள அனர்த்தம் இப்போது தணிந்து விட்டது.

வெள்ளம் வடிந்து விட்ட போதிலும், அங்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து அம்மக்கள் இன்னுமே மீண்டெழவில்லை. வெள்ளப் பாதிப்பில் இருந்து விடுபட்டு அப்பிரதேச மக்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதென்பது இலகுவான விடயமல்ல. ஏனெனில் பாதிக்கப்பட்டோரில் பெருமளவானோர் மிகவும் வறிய நிலைமையில் உள்ளவர்களாவர். வெள்ளம் சூழ்ந்திருந்த பகுதிகளில் காணப்பட்ட சிறுசிறு குடிசைகளைப் பார்க்கின்ற போது, அம்மக்கள் எத்தகைய மோசமான வறுமையிலும் பரிதாப நிலைமையிலும் வாழ்ந்து வந்துள்ளரென்பது புரிகின்றது.

விவசாயம், கூலித் தொழில் போன்ற சாதாரண ஜீவாதாரத் தொழில்களில் ஈடுபட்டு வந்த அவர்களிடம் சேமிப்பு என்பது துளியளவும் கிடையாது. அன்றாடம் கிடைக்கின்ற சொற்ப வருமானத்திலேயே அவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

அவர்கள் மீண்டும் சிறுசிறு தொழில் முயற்சிகளைத் தொடங்குவதற்கு நீண்ட காலம் செல்லக் கூடும். அதுவரை அரசும் தொண்டர் நிறுவனங்களும் வழங்குகின்ற நிவாரண உதவிகளிலேயே அவர்களது அன்றாட சீவியம் தொடரப் போகிறது.

அம்மக்கள் வெள்ளத்தினால் சூழப்பட்ட வேளையில் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று அளித்த உதவிகளை இலகுவில் மறந்து விட முடியாது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட முடிந்ததற்குக் காரணம் படையினரின் உடனடி முயற்சிகளாகும்.

அதேசமயம், அரசாங்கமும் அம்மக்கள் மீது விசேட கவனம் செலுத்தியிருப்பது புரிகின்றது. கொழும்பில் இருந்து அமைச்சர்களும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் உடனடிக் கவனம் செலுத்தியதைக் காண முடிந்தது.

இது ஒருபுறமிருக்க, தென்னிங்கையில் இருந்து மனிதநேய உதவிகளும் பெருமளவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைந்தன. வெள்ள அகதிகளுக்கு உதவும் விடயத்தில் பௌத்த தேரர்கள் சிலரும் அக்கறை செலுத்தியிருந்தமை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாதிப்புற்ற மக்களுக்கு உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்ட விடயத்தில் மற்றொன்றையும் இங்கு அவதானிக்க முடிந்தது. அரசியல்வாதிகளில் சிலர் நிவாரணப் பொதிகளுடன் அங்கு சென்றிருந்த அதேவேளை, தங்களது கருத்துகளையும் அம்மக்களிடம் விதைத்து விட்டு வந்துள்ளனர்.

வன்னி பிரதேசங்களில் வறுமையின் கொடுமையால் அல்லலுறும் மக்களை அரசியல்வாதிகள் இதுவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லையென்ற குற்றச்சாட்டை பலர் அம்மக்களிடம் உதிர்த்து விட்டு வந்துள்ளனர். வறிய மக்களின் இன்றைய அவலத்துக்குக் காரணமானவர்களென்று ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி விட்டு வருவதற்கு அந்த அரசியல்வாதிகள் தவறவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்றோரில் பலர் தங்களது அரசியல் எதிரிகளை வசைபாடுவதற்கும், அங்குள்ள மக்களை வசீகரித்துக் கொள்வதற்கும் இத்தகைய சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிந்தது.

முப்பது வருட காலமாக நீடித்த கொடிய யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அப்பிரதேச மக்கள் யுத்த ஓய்வுக்குப் பின்னரும் அவலத்திலேயே வாழ்ந்து வந்தனர். எண்ணிக்கையற்ற உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து வறுமையின் கொடுமையில் தவித்து வந்த அவர்களை வெள்ள அனர்த்தமும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது.

இவ்வாறான துயர வேளையில் அம்மக்களுக்குத் தேவையானது அன்றாட சீவியத்துக்கான நிவாரணங்களே தவிர அரசியல் கருத்துக்கள் அல்ல!

அல்லலுற்று நிற்கும் மக்களிடம் சென்றுதானா அரசியல் கருத்துகளைத் திணிக்க வேண்டும்?

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...

வடக்கு_ கிழக்கு தமிழர் பிரதேசங்களில் யுத்தம், வறுமை என்றெல்லாம் பல தசாப்த காலமாக துன்ப நிலைமை தொடர்ந்து வருவதற்கு தமிழர் அரசியல் தலைமைகள் மீதும் மாத்திரம் ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்துவது பெரும் அபத்தம்!

தமிழர்களின் அவலத்துக்கான காரணகர்த்தாக்கள் அவர்களல்லர். தென்னிலங்கையின் கடந்த கால அரசியல் தலைமைகளின் சுயநல அரசியலும் சூழ்ச்சிகளுமே அங்குள்ள மக்களின் இன்றைய அவலத்துக்கான பிரதான காரணிகளாகும். அன்று தொடக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற துன்பங்களுக்கெல்லாம் இவைதான் காரணிகள்.

சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையை துரும்பாகப் பயன்படுத்தியபடி தென்னிலங்கை அரசியல்வாதிகள் தங்களது அரசியல் பிழைப்பை நடத்த முற்பட்டதன் விளைவாகவே நாட்டில் இத்தனை அவலங்கள் தோன்றின. அவ்வாறான கேடுகெட்ட அரசியல் பாரம்பரியத்தை இன்றும் கூட கைவிட்டு விடுவதற்கு பலர் தயாராக இல்லை.

நாட்டில் மாறிமாறி அதிகாரத்துக்கு வந்திருந்த எத்தனையோ அரசாங்கங்கள் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முய்றசிகளை முன்னெடுத்திருந்த போதிலும், எதிரணிகளின் முட்டுக்கட்டைகள் காரணமாகவே சமாதான முயற்சிகள் தோல்வியைத் தழுவின. முன்னைய அரசாங்கங்கள் உண்மையான இதயசுத்தியுடன் சமாதான முயற்சிகளை முன்னெடுத்திருந்தனவா என்பது வேறு விடயம்...எனினும் அன்றைய வேளையில் சமாதான முயற்சிகளுக்கு எதிரணிகள் உளப்பூர்வமான ஆதரவை அளித்திருக்குமானால் நியாயமான அரசியல் தீர்வொன்றை இவ்வேளையில் எட்டிருக்க முடியும். இத்தனை உயிர், உடைமை அழிவுகளை இந்நாடு சந்தித்திருக்காது.

கடந்த கால வரலாறு இவ்வாறிருக்கையில், தமிழ் மக்களது அவலத்துக்குக் காரணமானவர்களென கண்டபடி எவரையும் நோக்கி விரல் நீட்டுவதென்பது தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல்வாதிக்கும் உகந்ததான செயலாகத் தென்படவில்லை. அத்தனை பேருமே அவலங்களுக்குப் பொறுப்பாளிகளாவர். அரசியல் சுயநலன்களுக்கான காய்நகர்த்தல்களாலேயே இத்தனை அவலங்களை இந்நாடு சந்திக்க வேண்டியிருந்தது. இன்றும் கூட இதே நிலைமை தொடருகின்றது.

இலங்கையின் அரசியல் புனிதமடையும் வரை உண்மையான அமைதியையும் ஐக்கியத்தையும் ஒருபோதுமே நாம் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.


Add new comment

Or log in with...