ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வது எப்படி சமஷ்டியாகும்? | தினகரன்

ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வது எப்படி சமஷ்டியாகும்?

ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வது எப்படி சமஷ்டியாக முடியும்? என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

சமஷ்டி,ஒற்றையாட்சி மற்றும்அதிகாரப் பகிர்வு என்பவற்றின் அர்த்தம் புரியாத நபர்கள் மக்களை குழப்புவதற்காக தெரிவிக்கும் கருத்துகள் நகைப்பிற்குரியவை எனவும், ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்விற்கு வடக்கு கட்சிகள் உடன்பட்டுள்ளன எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

களுத்துறை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,..

அரசியலமைப்பு நகல் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவினால் உத்தேச அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நகல் சட்டம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.அதன் பின்னர் விவாதம் நடைபெற்று இறுதி நகல் சட்டம் தயாரிக்கப்படும். அதன் போது சகல கட்சிகளுக்கும் தமது யோசனைகளை முன்வைக்க முடியும். எம்.பிகளும் அரசியலமைப்பு தொடர்பில் கருத்து முன்வைக்க முடியும்.

ஜனாதிபதியின் அதிகாரம் 19 ஆவது திருத்தத்தினூடாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜனாதிபதி முறையை ஒழிப்பதோ அல்லது பெயரளவிலான ஜனாதிபதி முறையை ஏற்படுத்தி பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரம் வழக்குவதே தான் புதிய யாப்பு உருவாக்குவதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.அடுத்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியலமைப்பினூடாக ஆவன செய்வதாகும்.

வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் முதற்தடவையாக பிரிக்கப்படாத நாட்டின் கீழ் அதிகாரப்பகிர்விற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன. 1950 களில் சமஷ்டி அதிகாரம் பெறுவதற்காக பெடரல் கட்சிகள் உருவாகின. ஆனால் அவை பின்வாங்கி சமஷ்டியன்றி ஒற்றையாட்சிக்கே உடன்பாடு வழங்கியுள்ளன.எமது நாட்டிற்கு சமஷ்டி தேவை என முதலில் சொன்னவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவாகும்.

டொனமூர் யாப்பிலும் சமஷ்டி முறை முன்வைக்கப்பட்டாலும் வடக்கு மக்கள் அதனை மறுத்தார்கள். பின்னர் எமக்கிடையிலான ஒற்றுமையின்மை காரணமாக தமிழ் மக்கள் சமஷ்டி கோரினார்கள். ஆனால் இன்று ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்விற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வடக்கிலுள்ள ஜனநாயக கட்சிகளுடன் நாம் தொடர்புகளை பேணியதால் இந்த நிலை உருவானது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வது எப்படி சமஷ்டியாக முடியும்? என்றார். (பா)


Add new comment

Or log in with...