மொழிக் கொள்கையில் தொடரும் முரண்பாடுகள் | தினகரன்

மொழிக் கொள்கையில் தொடரும் முரண்பாடுகள்

இலங்கையின் மொழிக் கொள்கையில் தொடர்ந்து முரண்பாடுகள் இருந்துகொண்டே இருக்கின்றது. பொதுவாக அரசியலமைப்பில் தமிழுக்கு உரிய இடமளிக்கப்பட்டுள்ள போதும் தமிழ் மொழிப் பயன்பாடு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையே காணப்படுகின்றது. அரச அலுவலகங்களிலும், பொது நிறுனங்களிலும் கூட தமிழ் மொழிக்கு உரிய இடமளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. பெரும்பான்மையான இடங்களில் பெயர்ப்பலகைகளிலும், கடிதத் தலைப்புகளிலும் கூட தமிழ்க் கொலையை பரவலாகவே காணமுடிகிறது.

நாட்டில் கையாளப்படும் மொழிகள் தொடர்பில் பெரும் குழப்பங்கள் காணப்படுகின்றன. எமது நாடு பெரியதொரு நாடல்ல இங்கு வாழும் மக்கள் இரண்டு மொழிகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்த இரு மொழிக்கொள்கையை கூட உரிய முறையில் பேண முடியாத அவலத்தையே நோக்க முடிகிறது. இரு மொழிப் பயன்பாட்டை சரியாக பின்பற்ற முடியாமல் தடுமாறும் நிலையை தொடர்ந்து அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. சமூக வலைத்தளங்களில் கூட பெயர்ப்பலகைகளில் தமிழ் கொலை உச்ச நிலையில் காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியலமைப்பின் நான்காவது அத்தியாயத்தின் 18வது ஷரத்தின் பிரிவு (1) இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் எனக் கூறுகிறது. அதற்கடுத்தபடியான பிரிவு (2) ல் தமிழும் அரச கரும மொழி ஒன்றாதல் (3) ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் நான்காவது அத்தியாயத்தின் 19வது ஷரத்தின் பிரகாரம் இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும்தான் அமைதல் வேண்டும். இரண்டு மொழிகளும் சமமானவையாகவே கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் நாட்டில் இந்த அரசியலமைப்பு விதிகள் உரிய முறையில் பேணப்படுவதாகத் தெரியவில்லை. அமைச்சுக்கள். திணைக்களங்களில் கூட சிங்களத்தில் மட்டுமே அலுவல்கள் இடம்பெறுகின்றன. சில முக்கிய சந்தர்ப்பங்களில் அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டினால் அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் தவறுக்கு வருந்துகின்றோம். இனிவரும் காலங்களில் அதனை சீர்செய்வோம் எனக் கூறிச் செல்கின்றனர். அந்த வார்த்தையோடு அது மறந்துவிடப்படுகின்றது. சாதாரண மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றச்செல்லும் போது மொழிபெயர்ப்பாளர்களை கூட அழைத்துச் செல்ல வேண்டிய பரிதாப நிலையே காணப்படுகின்றது.

வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகின்ற போதிலும் வடக்கு கிழக்குக்கு வெளியே தென்னிலங்கையில் பரந்துபட்டு வாழும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடி சொல்லும் தரமன்று தெற்கில் எந்தவொரு கிராமசேவை அதிகாரிகள் பிரிவிலும் தமிழில் அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கு தமிழ் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து நீண்ட காலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றது.

தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் பொறுப்பில் மொழிகள் குறித்த திணைக்களம் உள்ளது. கடந்த காலங்களில் மொழிப் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்ட போதெல்லாம் அவற்றைத் தீர்த்துவைப்பதில் அமைச்சர் மனோ கணேசன் துரிதமாகச் செயற்பட்டதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். தமிழ் மொழியை நாட்டில் மேம்படுத்த வேண்டுமென்பதில் அவர் நீண்டகாலமாக அயராது பாடபடுட்டு வருகின்றார்.

நாட்டின் பல இடங்களிலும் காணப்படும் தமிழ் மொழி பிழைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி திருத்துவதில் கூடுதல் கரிசனை காட்டி வருகின்றார். முக்கியமாக போக்குவரத்துச் சேவையில் பஸ்களில் காணப்படும் பெயர்பலகைகளிலும் தமிழ் கொலைகளை அகற்றுவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு, பஸ் டிப்போக்கள் என்பவற்றுக்கு அறிவுறுத்தல்களைக்கூட வழங்கியுள்ளார் ஆனாலும் அதிகாரிகள் மட்டத்தில் பொடுபோக்கான நிலை தொடர்வதையே காண முடிகிறது.

இது இவ்விதமிருக்க மொழி விவகாரத்தில் மற்றொரு தலையிடி அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படாத சீன மொழியை நுழைக்கும் ஒரு முயற்சியே அது. தலைநகரிலும், வெளியிடங்களிலும் நிறையவே சீன மொழி பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன. அவற்றில் அரச கரும மொழியான சிங்களமோ, தமிழோ இணைப்பு மொழியான ஆங்கிலமோ காணப்படுவதில்லை. தனிச்சீன மொழி மட்டுமே காணப்படுகின்றது. சீன மொழியை மட்டும் பெயர்ப்பலகைகளில் பொறிப்பதற்கு அதிகாரம் வழங்கியது யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கையிலுள்ள சீனத் தூதுவரைச் சந்தித்த அமைச்சர் மனோ கணேசன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் சீன முதலீட்டாளர்கள் இலங்கையின் சட்டதிட்டங்களை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். சீன மொழி ஊடுருவல் எமது நாட்டின் தாய் மொழிக்கு, அரச கரும மொழிகளுக்கு பாதகமான நிலை ஏற்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும். ஒரு மொழியால் மற்றொரு மொழிக்கு அழிவு ஏற்படுவதை எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.

எமது மொழிக்கொள்கை நாட்டில் நிரந்தரமானதாகவும், கட்டாயமானதாகவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் அரச கருமமொழி விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்பதன் காரணமாகவே வெளியார் ஊடுருவல்கள் வருகின்றன. சிங்கள மொழியும், தமிழ் மொழியும் சமாந்தரமாக முழு நாட்டிலும் அமுல்படுத்தப்படுவதை அரசாங்கம் தாமதமின்றி உறுதிசெய்ய வேண்டும். நாட்டின் சட்டங்கள் இறுக்கமாக கையாளப்பட வேண்டும். வெளிநாடுகள் எமக்கு எந்த உதவிகளை செய்த போதிலும், ஆதரவுக்கரம் நீட்டிய போதிலும் எமது சட்டவரையறைகளை மீறுவதற்கு இடமளிக்கப்படக்கூடாது. அரசியலமைப்பை உரிய முறையில் பேணப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி வைக்கின்றோம்.


Add new comment

Or log in with...