Friday, April 26, 2024
Home » எரிபொருள், நிலக்கரி கொள்வனவு குறித்து பகிரங்க விவாதத்துக்கு தயார்

எரிபொருள், நிலக்கரி கொள்வனவு குறித்து பகிரங்க விவாதத்துக்கு தயார்

அனுர குமார திசாநாயக்கவுக்கு அமைச்சர் கஞ்சன சவால்

by mahesh
December 13, 2023 9:10 am 0 comment

எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் நீதிமன்றத்தை நாட முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர சபையில் அனுரகுமார திசாநாயக்கவுக்கு பதிலளித்தார்.

தாம், அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நேற்று சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், முறைகேடுகள் இடம்பெற்றிருக்குமாயின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அதே வேளை, இது தொடர்பில் அவருடன் பகிரங்க விவாதத்துக்கு செல்லவும் தயார் என அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எரிபொருள், மின்னுற்பத்தி கட்டமைப்பு தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையற்றவை. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பிலான திட்டங்கள் விலை மனுகோரல் இன்றி முன்னெடுக்கப்பட்டவை என்று அவர் குறிப்பிடுவதும் அடிப்படையற்றது.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் பொது மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு 2021.04.30 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

பொதுமக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு விடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கு அமைய, 665 செயற்திட்டமிடலாளர்கள் முன்னிலையாகினர். அதனைத் தொடர்ந்து 136 செயற்திட்டமிடலாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். தொழினுட்ப குழுவே திட்டமிடலாளர்களை தெரிவு செய்தது.அந்த குழுவில் ஜனாதிபதியோ, அமைச்சரோ அல்லது அமைச்சரவை உறுப்பினர்களோ அங்கம் வகிக்கவில்லை.

அந்த வகையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரலாம்.அவ்வாறு அவர் வந்தால் நாட்டு மக்கள் அவரது அறிவு தொடர்பில் தெளிவு பெற்றுக் கொள்வார்கள்.

ஊழல் மோசடி செய்தவர்கள் தொடர்பான கோவை தம்மிடம் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். எனினும் இதுவரை ஊழல் மோசடி செய்ததாக குறிப்பிடப்படும் தரப்பினருக்கு எதிராக அவர் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT