பொருளாதார அபிவிருத்தியே புத்தாண்டின் புதிய இலக்கு | தினகரன்

பொருளாதார அபிவிருத்தியே புத்தாண்டின் புதிய இலக்கு

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதன்அவசியம் இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது. 2015இல் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த போதிலும், பொருளாதார நிலைமை உறுதியாக பேணப்படவில்லை என்பதையே நோக்க முடிகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிருவாகப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நாணயப் பெறுமதி வீழ்ச்சி அரசாங்கத்துக்கு பலத்த சவாலாகக் காணப்படுவதன் காரணமாக சரியான இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருப்பதை மறுத்துரைக்க முடியாது.

நாணயப் பெறுமதி வீழ்ச்சியென்பது எமது நாட்டை மாத்திரம் பாதிக்கவில்லை. இது உலகளாவிய நெருக்கடி நிலையை தோற்றுவித்திருக்கின்றது. பொருளாதார வீழ்ச்சி மேலோங்குகின்ற போது மக்கள் பெரும் வறுமை நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மக்களை வாட்டி வதைக்கின்றது. இந்த ஸ்திரமற்ற நிலைமை காரணமாக அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவது சாதாரணமான விவகாரம்தான். அது சில சமயங்களில் ஆட்சியின் இருப்பைக் கூட கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது.

அரச இயந்திரம் சரியான முறையில் இயங்க முடியாது போனால் முழு நாடும் ஸ்தம்பித நிலையை அடைந்து விடும். பொருளாதார நெருக்கடியொன்று உருவாகின்ற போது அதிலிருந்து தேசத்தை மீட்டெடுப்பதில் அரசாங்கத்துக்கு மட்டுமன்றி எதிர்க்கட்சித் தரப்பினருக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறந்து விடக் கூடாது. கடந்த வருடம் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக சுமார் 53 நாட்கள் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை நாம் வெறுமனே 53 நாட்கள் எனப் பார்க்க முடியாது. அதன் விளைவாக நாடு பத்தாண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னடைவிலிருந்து மிக இலகுவில் மீண்டு வர முடியாது. இந்தச் சவாலுக்கு எவ்வாறு முகம் கொடுத்து வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு சர்வதேசத்தை நம்பி இருக்க முடியாது. சர்வதசம் முழுமையாக உதவும் என எதிர்பார்க்கவும் முடியாது. இந்த விடயத்தில் நாம் எமது சொந்தக்கால்களில் நின்றாக வேண்டும். இதனையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வலியுறுத்தி இருக்கிறார்.

சுற்றுலாத்துறையை மேலோங்கச் செய்ய வேண்டியது மிக முக்கியமானதாகும். சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக வருகை தருவதன் மூலம் வெளிநாட்டுச் செலாவணியை அதிகரித்துக் கொள்ள முடியும். அதற்கு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கக் கூடிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் சுற்றுலாத்துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சமீப காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், இனங்களுக்கிடையிலான முறுகல்களுமே இதற்கான காரணங்களாகும்.

இதிலிருந்து மீள்வதற்கான குறுகிய காலத் திட்டத்தை அறிமுகப்படுத்தி துரிதமாக செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய விதத்தில் வரலாற்று பூர்வமான நிர்மாணங்களை ஏற்படுத்த வேண்டும். கண்டியும், நுவரெலியாவும் மட்டும்தான் அழகொளிர் பிரதேசங்களாகக் கொள்ள முடியாது. முழு நாட்டையும் உள்வாங்கியதாக மாற்றங்களை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உள்ளூர் உற்பத்திகள் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். எமது உற்பத்திகளை கூடுதலாக ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இறக்குமதிக்குச் சமாந்தரமாக எமது உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படவும் வேண்டும். எமது உள்ளூர் வாசனைத் திரவியங்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி இருந்து வருகின்றது. சமீப காலமாக அந்த வாய்ப்பை நாம் இழக்கும் நிலைமை ஏற்பட்டிருந்து. அதனை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது இவ்விதமிருக்க, மத்திய வங்கி ஆளுநர் நேற்றுமுன்தினம் 2019 ஆம் ஆண்டுக்கான நாணய மற்றும் நிதித்துறை கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். அதன் போது மிக முக்கியமான பல விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 2018 ஆண்டிலிருந்ததை விட புதிய ஆண்டில் பெருமளவு அதிகரிக்கக் கூடியதாக அமையும் என அவர் எதிர்வு கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் 4 சதவீதத்தை தாண்டக் கூடிய விதத்தில் பொருளாதார கட்டமைப்பை சீர்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நாணயப் பெறுமதி வீழ்ச்சி சீரடைவதற்கு மேலும் சில மாதங்களாவது காலமெடுக்கும் என அவர் குறிப்பிட்டிருக்கின்றார். நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரக் கட்டமைப்பு மேலோங்கும் வகையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுமட்டும் போதாது... சர்வதேச பொருளாதாரம் ஸ்திரத்தன்மை கொண்டதாக மாற வேண்டும். உலக நாணயச் சந்தை சீராகும் போதுதான் இலங்கை போன்ற நாடுகள் பயனடையக் கூடியதாக இருக்கும்.

அரசாங்கம் அதன் செலவுகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அத்தோடு ஏற்றுமதி வர்த்தகம் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமிய மட்டத்திலிருந்து உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டு அவற்றை தனியார்துறை ஏற்றுமதியாளர்களைக் கொண்டாவது ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக் கொள்வது மிக அவசியமானதாகும்.

இவ்வாறான சரியான இலக்கில் அரசாங்கம் பயணத்தை முன்னெடுத்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த முடியும். இந்த விடயத்தில் தூரநோக்குடன் செயற்பட வேண்டியது முக்கியமானதாகும். அரசியல் முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றம், எதிர்காலம் குறித்து எண்ணி சகலரும் அரசியல் பேதமின்றி பங்களிப்புச் செய்ய வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளதை மறந்து விடக் கூடாது.


Add new comment

Or log in with...