SLvNZ; ஒருநாள் தொடரில் சாதிக்குமா இலங்கை? | தினகரன்

SLvNZ; ஒருநாள் தொடரில் சாதிக்குமா இலங்கை?

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நாளை (03) ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை அணி பறிகொடுத்துள்ள நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. கடந்த ஆண்டைப்பொருத்த வரை இலங்கை அணிக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. சொந்த மண்ணில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் தோல்வியைத்தழுவிய நிலையிலேயே இலங்கை நாளை நடைபெறவுள்ள போட்டியை எதிர்க்கவுள்ளது. 

பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்ததை மற்றும் இரண்டாவது போட்டியை 5ஆம் நாள் வரை கொண்டு சென்றமை என்பன இலங்கை அணியின் ஓரளவு எழுச்சியை காட்டுகின்ற போதிலும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒருநாள் போட்டிகளை அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு இலங்கை அணி ஆடப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை அணியை பொறுத்த வரையில் முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்ய முக்கிய காரணமாகவிருந்த அஞ்சலோ மெத்திவ்ஸ் உபாதை காரணமாக ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகியுள்ளமை இலங்கை அணிக்கு பேரிழப்பாகும். குறிப்பாக விக்கெட்டுகள் சடுதியாக வீழ்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நிதானமாக ஆடி மேலும் விக்கெட் இழப்பை தடுக்கக்கூடிய வல்லமை மெத்திவ்சிடம் உள்ளதென்றால் அது மிகையில்லை. 

கடந்த வருடம் மோசமான துடுப்பாட்டம் காரணமாக அதிகம் விமர்சிக்கப்பட்ட குசல் மெண்டிஸ் நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஓட்டங்களைப் பெற்றமை இலங்கை அணிக்கு கூடுதல் பலம். மத்திய வரிசையில் உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ள சகலதுறை வீரர் அசேல குணரத்ன, தசுன் சானக மற்றும் திசர பெரேரா ஆகியோர் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்திற்கு பலமாக அமையும் எனலாம். இவர்கள் தவிர குசல் பெரேரா மீண்டும் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அஞ்சலோ மெத்திவ்ஸுக்கு பதிலாக பெயரிடப்பட்டுள்ள சதீர சமரவிக்கிரம அண்மையில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக செயற்பட்டிருந்தமை இலங்கை அணிக்கு கூடுதல் பலமாகும். 

பந்து வீச்சைப்பொருத்த வரையில் அணித்தலைவர் லசித் மாலிங்கவினது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமையவுள்ளது. குறிப்பாக புதிய ஒருநாள் மற்றும் ரி20 தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 2019 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று உலகக்கிண்ணத் தொடரில் தலைவராக தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் லசித் மாலிங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தவிர நுவன் பிரதீப் நியூசிலாந்து மண்ணில் தனது சிறப்பான பந்து வீச்சுப்பதிவை கொண்டுள்ளமையானது இலங்கை அணிக்கு கூடுதல் பலமாகும். சுரங்க லக்மால் ஒருநாள் குழாமில் இல்லாமை இலங்கை அணியின் பந்து வீச்சில் செல்வாக்குச்செலுத்தும் எனலாம். குறிப்பாக பந்து வீச்சுக்கு உசிதமான ஆடுகளங்களில் லக்மால் அபாரமாக செயற்படுகின்றமை நிதர்சன உண்மையாகும்.

எனவே இவர்கள் தவிர பந்து வீச்சில் சகல துறை வீரர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. தசுன் சானக மற்றும் திசர பெரேரா ஆகியோரது மித வேகப்பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த வேண்டிய சவாலை இலங்கை அணி ஏற்றுள்ளமை தெளிவாக தெரிகிறது. 

இது தவிர புதிய துடுப்பாட்டப்பயிற்றுவிப்பாளர், புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் மற்றும் புதிய கிரிக்கட் தெரிவுக்குழு என கடந்த வருட இறுதியில் மாற்றங்களை சந்தித்த இலங்கை அணி இந்த புதிய வருடத்தில் புதிய உத்வேகத்துடன் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.

மறுபுறம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் 3ஆம் நிலையிலுள்ள நியூசிலாந்து அணி சகல துறையிலும் பிராகாசிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. குறிப்பாக உலகக்கிண்ண தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு போட்டியும் அணிகளுக்கு முக்கியமானதாக அமையும் என்பதை மறுக்க முடியாது. நியூசிலாந்து அணிக்கு அதிரடி வீரர் மார்ட்டின் கப்டில் மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளமை அவ்வணிக்கு கூடுதல் பலமாகும்.

குறிப்பாக கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை கப்டில் துவம்சம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் தவிர ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக கொலின் மொன்றோ சிறப்பாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அணித்தலைவர் கேண் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ், டிம் சவ்தி மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோருக்கு மேலதிகமாக சுழல் பந்து வீச்சாளரான இஷ் ஷோதி போன்றோரும் அணியில் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

தனுஷ்க குணதிலக,நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, அசேல குணரத்ன, திசர பெரேரா, தசுன் சானக, லசித் மாலிங்க (தலைவர்), நுவன் பிரதீப்,

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி 

மார்ட்டின் கப்டில், கொலின் மொன்றோ, கேன் வில்லியம்சன்(தலைவர்), ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், ஜேம்ஸ் நீசாம், லோகி பேர்குசன், இஷ் ஷோதி, ட்ரென்ட் போல்ட், டிம் சவ்தி, டக் ப்ரெஸ்வெல்

இரு அணிகளும் இதுவரை 95 போட்டிகளில் மோதியுள்ளதுடன் அதில் நியூசிலாந்து அணி 45 போட்டிகளிலும் இலங்கை அணி 41 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி சமநிலையிலும் 8 போட்டிகள் முடிவு எட்டப்படாமலும் நடைபெற்றுள்ளன. 


Add new comment

Or log in with...