Home » கோரிக்கைகள் அடிப்படையற்றவை உடனடியாக நிறைவேற்ற முடியாதவை
தபால் சேவை ஊழியர்கள் போராட்டம் அர்த்தமற்றது;

கோரிக்கைகள் அடிப்படையற்றவை உடனடியாக நிறைவேற்ற முடியாதவை

சபையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார

by mahesh
December 13, 2023 2:10 pm 0 comment

தபால் சேவை ஊழியர்களின் போராட்டம் அர்த்தமற்றது என்றும் அவர்களின் கோரிக்கைகள் அடிப்படையற்றது எனவும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

20,000 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது சாத்தியமற்றது என்றும் அத்துடன் நுவரெலியா தபால் நிலையம் எவருக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் அவர் சபையில் தெரிவித்தார். தபால் சேவை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அது தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என சபையில் நேற்று பிரேம்நாத் சி தொலவத்த எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நானும் தபால் மாஅதிபரும் தொழிற்சங்கத்தினருடன் பல்வேறு பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் வகையில் யோசனைகளையும் முன் வைத்துள்ளோம். எனினும் இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரியும் நுவரெலியா தபால் நிலையத்தின் முதலீடு தொடர்பிலும் கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு தீர்மானங்களுமே அரசாங்கத்தினால் கொள்கை ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாகும்.

அதே வேளை,தபால் திணைக்களம் கடந்த வருடங்களில் கடும் நட்டத்தை எதிர் நோக்கியதுடன் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளது. நட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, நுவரெலியா தபால் நிலையம் எவருக்கும் விற்பனை செய்யப்படவில்லை என்பதுடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கே தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜனாதிபதி இம்முறை வரவு செலவு திட்டத்தில் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையில் இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு என்பது சாத்தியப்படாது. அந்த வகையில் அவர்கள் முன்வைக்கும் இரண்டு கோரிக்கைகள் தொடர்பிலும் எத்தகைய தீர்மானத்தையும் தற்போதைய நிலையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT